இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு..? மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் இன்று அறிவிப்பு
இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு..? மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் இன்று அறிவிப்பு
சென்னை: மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளில் வரும் 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் தி.நகர் கட்சி தலைமை அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் இணைய வழியில் நேற்று நடந்தது. இதில், இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது, புறக்கணிப்பதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில், தவெக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம். நாம் ஆட்சிக்கு மட்டுமே ஆதரவு, பொதுத் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. நாம் என் ஆதரிக்க வேண்டும். தவெக அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என நிர்வாகிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கூட்டத்தின் முடிவில், சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இடைத்தேர்தல் குறித்து முடிவு செய்வதற்காக, இன்று காலை திருச்சியில் சிபிஎம் கட்சியின் அவசர மாநில குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு முடிவு செய்யப்படும். மாநில குழுவுக்குத்தான் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது. அந்த வகையில் மாநில குழு கூட்டத்தில் எடுக்கக்கூடிய முடிவு தான் இறுதியானது. இன்று திருச்சியில் நடைபெறும் அவசர மாநில குழு கூட்டத்தில் மதியம் 2.30 மணிக்குள் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும்.
இன்று நடைபெறும் அவசர மாநிலக் குழு கூட்டத்தில், இடைத்தேர்தல் குறித்து அனைத்து கோணங்களிலும் ஆலோசிக்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து விட்டு மாற்று கட்சியில் இணைவது ஆரோக்கியமற்ற, அரசியல் சந்தர்ப்பவாத நிலை என்று நாங்கள் ஏற்கனவே விமர்சித்துள்ளோம். இந்த கருத்தில் எந்தவிதமான மாறுபாடும் இல்லை. மாநில கூட்டத்திற்கு பிறகு இறுதியான, உறுதியான முடிவை வெளியிடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இன்னும் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. இன்று பிற்பகலில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் தனது கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கிறார்.