இடைத்தேர்தலில் தவெகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்
இடைத்தேர்தலில் தவெகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
கடந்த நான்கு மாத காலத்தில் மட்டும் சுமார் 250 கொலைகள், 300 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளதாக இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Published : September 26, 2026 at 8:19 PM IST
செங்கல்பட்டு: தவெக அரசுக்கு இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கணிகா சம்பத்தை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 26) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
முதலமைச்சர் விஜய்க்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “முந்தைய தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், வாக்களித்த மக்களையும், தமக்காக உழைத்த கட்சி நிர்வாகிகளையும் மதிக்காமல் உதாசீனப்படுத்தியுள்ளார்.
குதிரை பேரத்தின் மூலம் பெட்டி வாங்கிவிட்டு தன் பதவியை ராஜினாமா செய்து, மாற்றுக்கட்சியில் இணைந்து தற்போது மீண்டும் அதே தொகுதியில் வேட்பாளராக அவர்கள் களம் இறங்கியுள்ளதால்தான் இந்த இடைத்தேர்தல் வந்துள்ளது. எம்.ஜி.ஆரால் கண்டெடுக்கப்பட்டு, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட அதிமுகவின் தயவால் வெற்றி பெற்ற ஒருவர், பாடுபட்ட நிர்வாகிகளின் நெஞ்சம் பதறும் வகையில் மாற்றுக்கட்சிக்கு சென்று வேட்பாளராக நிற்பது ஜனநாயகப் படுகொலை.
இது பெரும் வெட்கக்கேடான விஷயம். மேலும் நேற்றைய தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய், இப்படிப்பட்ட ஒருவரைத் தன் பக்கத்தில் வைத்துக்கொண்டு, அவரை வேட்பாளராக அறிமுகம் செய்து வீரவசனம் பேசியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. இந்தியாவில் வேறு எந்தக் கட்சியிலும் ராஜினாமா செய்துவிட்டு வந்த கையோடு சீட்டு கொடுத்த வரலாறு இல்லை. ஆனால் தவெக தலைவர் அவர்களுக்கு சீட்டு கொடுத்து நிறுத்தியுள்ளார். எனவே கட்சி மாறிய துரோகிக்கும், அவர்களை ஆதரவளித்து வேட்பாளராக நிறுத்திய தவெக தலைவருக்கும் இந்த இடைத்தேர்தல் மூலமாக மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்” என பேசினார்.
முதலமைச்சர் விஜய் பச்சை பொய் பேசியுள்ளார்
இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, “ஜெம் வீரமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் தான் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றபோது தகுந்த ஆதாரம் இல்லை. எனவே இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனால் நீதிபதி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது. ஜோசப் விஜய் முதலமைச்சரானார். காவல்துறை மற்றும் உள்துறை பொறுப்புகள் அவரது கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. இந்த நிலையில், கடந்த ஜூன் 19-ஆம் தேதியன்று இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை அதிகாரிகள் மீண்டும் வாய்தா கேட்டனர். அப்போது நீதிபதி நான்கு வாரங்களுக்குப் பிறகு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, ஜூன் 20ஆம் தேதியன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. மீண்டும் அவகாசம் கேட்கப்பட்டது. பின்னர், ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது காவல்துறை அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் அரசு வழக்கறிஞர் தடவியல்துறை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார். ஆனால் நீதிபதி பலமுறை அவகாசம் கொடுக்கப்பட்டுவிட்டது.
தொடர்ந்து நீங்கள் வாய்தா கேட்டுக்கொண்டே இந்த வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஜெம் வீரமணியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளாரே தவிர, முதலமைச்சரின் உத்தரவின் பேரில் கைது செய்யப்படவில்லை.
இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு கடந்த நான்கு மாதங்களில் 300 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அரசாங்கம் இந்த அரசாங்கம் தான். மேடையில் வீர வசனம் பேசும் முதலமைச்சர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? இங்குப் பொதுமக்கள் மற்றும் சிறுமிகளுக்குப் பாதுகாப்பு இல்லை.
காவல்துறை மீது எந்த அச்சமும் இல்லாமல் சர்வ சாதாரணமாக கொலை, கொள்ளைகள் நடக்கின்றன. அடுத்ததாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தங்களது வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி விலைக்கு வாங்கிவிட்டார் எனத் தவறான கருத்தைப் பதிவு செய்து வருகிறார்” என்று தெரிவித்தார்.