இது வெறும் ஆரம்பம் தான்.. வைபவ் சூர்யவன்ஷி பதிவு.. அனைத்து சாதனையையும் முறியடிப்பார்
இது வெறும் ஆரம்பம் தான்.. வைபவ் சூர்யவன்ஷி பதிவு.. அனைத்து சாதனையையும் முறியடிப்பார்- லட்சுமண்
ஹராரே: இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி, ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் தனது திறமையை நிரூபித்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அரைசதம் அடித்த மிக இளம் வீரர் என்ற சாதனையை படைத்துள்ள வைபவ், ஹராரேவில் அண்மையில் நிறைவடைந்த ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தியுள்ளார்.
தற்போது 15 வயதே ஆகும் வைபவ், தனது சர்வதேச கிரிக்கெட் பயணம் குறித்து, "இது வெறும் ஆரம்பம் தான்" என்று உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. இப்போட்டியில் சூர்யவன்ஷி தனது சர்வதேச டி20 கிரிக்கெட்டின் அதிகபட்ச ஸ்கோரான 81 ரன்களைக் கடந்த பிறகு, இவ்வாறு பகிர்ந்துள்ளார்.
இறுதிப் போட்டியில், அதிரடியாக விளையாடிய சூர்யவன்ஷி 49 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணியை 157/7 ரன்களுக்கு சுருட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த தொடரின் மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு அரைசதங்கள் உட்பட 196.10 என்ற அதிரடி ஸ்டிரைக்-ரேட்டுடன் மொத்தம் 151 ரன்களை சூர்யவன்ஷி குவித்துள்ளார்.
போட்டிக்குப் பிறகு பேசிய சூர்யவன்ஷி, "இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது கனவு நனவாகியுள்ளது. எனது முதல் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதுகளை வென்றுள்ளேன். இங்கு எனது தயாரிப்பு முறைகள் சிறப்பாக இருந்தன. பயிற்சியாளர் மற்றும் கேப்டன் உட்பட அணியினர் அனைவரும் எனக்கு முழு ஆதரவு அளித்தனர். எனது வழக்கமான டி20 ஆட்டத்தையே நான் விளையாட முயன்றேன். அணிக்கு ஒரு நல்ல தொடக்கத்தை அளித்து, அதை பெரிய இன்னிங்ஸாக மாற்ற வேண்டும் என்பதே எனது திட்டமாக இருந்தது" என்றார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற அண்டர்-19 ஐசிசி உலகக் கோப்பையின் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்களில் அரைசதமும் சதமும் அடித்து இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல சூர்யவன்ஷி உதவினார். அந்த போட்டிகளும் ஹராரே மைதானத்திலேயே நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. "நான் முன்பே அண்டர்-19 உலகக் கோப்பை தொடரை இந்த ஹராரே மைதானத்தில் விளையாடியுள்ளேன். இங்கு விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. பயிற்சியில் நான் எதைச் செய்கிறேனோ, அதையே போட்டிகளிலும் செயல்படுத்த முயல்கிறேன்" என்று அவர் கூறினார்.
இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளர் விவிஎஸ் லட்சுமண், சூர்யவன்ஷி சர்வதேச அளவில் பல சாதனைகளை முறியடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். "அவர் சதம் அடிக்காதது குறித்து ஏமாற்றம் அடைந்திருக்கலாம். ஆனால், சதம் அடிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு இது முதல் முறையோ அல்லது கடைசி முறையோ அல்ல என்று நாங்கள் அவரிடம் கூறினோம்.