இயந்திரத்தனமாக நோட்டீஸ் அனுப்புவதா? தேர்தல் கமிஷன் மீது கோர்ட் அதிருப்தி
- சிறப்பு நிருபர் -
டில்லியில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில், தெளிவான காரணங்கள் இல்லாமல், வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுவதாக எழுந்த புகார் குறித்து தேர்தல் கமிஷன் விளக்கம் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டில்லியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டபோது, லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டதாக புகார் எழுந்தது. மேலும், வாக்காளர்கள் ஏற்கனவே அளித்த தகவல்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி பலருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேர்தல் கமிஷனின் இந்த திருத்தப் பணியில் குளறுபடிகள் இருப்பதாக கூறி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா அமர்வில் இம்மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ''டில்லியில் சுமார் 33 லட்சம் வாக்காளர்களுக்கு தர்க்கரீதியான முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தினக்கூலித் தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ''பெற்றோர் - பிள்ளைகளுக்கு இடையிலான வயது வித்தியாசம் குறைவாக இருப்பதாக கூறியும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது,'' என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பெரும்பாலான நோட்டீஸ்கள் எந்தவித தெளிவான காரணமுமின்றி கணினி மூலம் இயந்திரத்தனமாக தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டவை போல் தெரிகின்றன. நோட்டீஸ் அனுப்புவதற்கு முன் கூடுதலாக பரிசீலனை செய்வது அவசியம். வாக்காளர்களிடம் எதிர்பார்க்கப்படும் தகவல்கள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
வேறு மாநிலத்தில் இருந்து டில்லிக்கு இடம்பெயர்ந்த வாக்காளரிடம், '2019ல் எங்கு ஓட்டளித்தீர்கள்?' என்பது போன்ற குறிப்பிட்ட கேள்விகளை கேட்கலாம்.
பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான விளக்கங்களை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் தேர்தல் கமிஷன் வெளியிட வேண்டும். வாக்காளர் பதிவு அதிகாரிகள் நேரடியாக மக்களை சந்தித்து உதவ வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.