📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 26, 2026 11:34 AM

Jana Nayagan Day 3 Box Office

Jana Nayagan Day 3 Box Office

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். தடைகளை தாண்டி வெளியாகியிருக்கும் படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல்கL வெளியாகியிருக்கின்றன.

விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார். ஜனவரி மாதமே ரிலீஸாகியிருந்திருக்க வேண்டிய அந்தப் படம் சென்சார் அதிகாரிகளின் முட்டுக்கட்டையால் அப்போது ரிலீஸாகவில்லை. அதனையடுத்து பல பிரச்னைகளை கடந்து ஒருவழியாக ஏ சான்றிதழை பெற்றுவிட்டது. அந்த சான்றிதழோடு கடந்த 23ஆம் தேதி திரைப்படமானது திரையரங்குகளில் கோலாகலமாக ரிலீஸாகின. ரசிகர்களும் ஆர்வத்துடன் படம் பார்க்க தியேட்டர்களுக்கு படையெடுத்தார்கள்.

ஆச்சரியத்தில் திரையுலகம்: விஜய்க்கு உள்ள மாஸை பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால் ஜனநாயகன் திரைப்படம் முழுவதுமாக சில மாதங்களுக்கு முன்பே இணையத்தில் லீக்காகிவிட்டது. அதை கிட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கும் மேல் பார்த்துவிட்டார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இருப்பினும், தியேட்டர்களில் ரிலீஸானபோது கூட்டம் அலைமோதியது. இதை பார்த்த ஒட்டுமொத்த திரையுலகமும், 'லீக்கான படத்தை பார்ப்பதற்கே இவ்வளவு கூட்டமா?' என ஆச்சரியத்தில் மூழ்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி இருந்தது படம்?: படத்தை எடுத்துக்கொண்டால் ஆஹா ஓஹோவென்றெல்லாம் இல்லை. சொல்லப்போனால் வினோத்தின் ஸ்டைல் கொஞ்சம்கூட இதில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பகவந்த் கேசரியை அப்படியே ஈ அடித்தான் காப்பி போல் எடுத்து வைக்காமல் ரிமோட் கன்ட்ரோல் போர், ரோபோட்டிக் சண்டை கூடுதலாக சில விஷயங்களை சேர்த்து கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அது ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை என அவர்கள் படம் பார்த்த பிறகு பேசுவதை கேட்கவும் முடிகிறது.

என்ன மைனஸ்?: படம் ஏற்கனவே தெலுங்கு ரீமேக்தான். ஆனால் தமிழிலும் அந்த தெலுங்கு வாடை பலமாகவே அடிக்கிறது. அதேபோல் ஏகப்பட்ட லாஜிக் பிரச்னைகள், நம்பமுடியாத காட்சிகள் என பல மைனஸ்கள் அடுக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் அத்தனையையும் மீறி விஜய் என்ற ஒற்றை மனிதர் மொத்த படத்தை தாங்கி பிடித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு ஃப்ரேமிலும் தன்னுடைய அசாத்திய எனர்ஜியால் அனைவரையுமே கட்டிப்போடுகிறார்.

ஒன் லாஸ்ட் டைம்: இந்தப் படம்தான் அவரது கடைசி படம். எனவே இதனை ஒன் லாஸ்ட் டான்ஸ் என்று அழைக்கிறார்கள் அவரது ரசிகர்கள். படத்தின் லாஜிக் ஓட்டைகள் எல்லாத்தையும் தவிர்த்துவிட்டு பார்த்தால்; இப்படம் விஜய் ரசிகர்களுக்கு கம்ப்ளீட் ஃபுல் மீல்ஸாகவே இருந்தது. கடைசி படம் என்பதால் பலர் மீண்டும் மீண்டும் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கிறார்கள். இந்நிலையில் படம் மூன்றாவது நாளான நேற்று செய்திருக்கும் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

வசூல் நிலவரம்: Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தரவுகள்படி, மூன்றாவது நாளான நேற்று இந்தியாவில் அந்தப் படம் 28.50 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறதாம். இரண்டாவது நாள் வசூலை ஒப்பிடுகையில் இது 34 விழுக்காடு அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மொத்தம் இதுவரை மூன்று நாட்களில் அப்படம் 92.35 கோடி ரூபாயை பாக்ஸ் ஆஃபிஸில் அள்ளியிருக்கிறதாம். இன்று விடுமுறை என்பதால் கண்டிப்பாக 100 கோடி ரூபாயை தாண்டிவிடும். விரைவிலேயே 200 கோடி ரூபாய் க்ளப்பிலும் படம் சேர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.