Jana Nayagan Day 9 Box Office
சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் கடந்த மாதம் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் பூஜா ஹெக்டே உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. விஜய் ரசிகர்கள் மட்டும் இது அவரது கடைசி படம் என்பதால் கொண்டாடி தீர்த்தார்கள். இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஜனநாயகன் திரைபடம்தான் விஜய்க்கு கடைசி படம். அதனால்தான் என்னவோ முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பல நெருக்கடிகளை படம் சந்தித்தது. எப்படியோ அத்தனையையும் கடந்து சென்சார் அதிகாரிகளிடம் ஏ சான்றிதழை பெற்றுவிட்டு கடந்த 23ஆம் தேதி படம் ரிலீஸானது. முதலமைச்சரான பிறகு ரிலீஸாகும் படம் என்பதாலும், விஜய்யின் கடைசி படம் என்பதாலும்; அலை அலையாய் திரண்டு தியேட்டர்களில் கூடினார்கள் ரசிகர்கள். அத்தனை பேரும் தங்கள் தளபதியின் ஒன் லாஸ்ட் டைம் டான்ஸை பார்க்க ஆவலோடு இருந்தார்கள்.
படம் சுமார்தான்: இது உருவாகும்போதே பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என சொல்லப்பட்டது. வினோத்தோ படக்குழுவினரோ அதுகுறித்து மூச்சுக்கூட விடவில்லை. படத்தை பார்த்த பிறகு அந்த பேச்சுக்கள் எல்லாம் உண்மைதான் என்பது புலப்பட்டது அதேசமயம் முழுக்க முழுக்க கேசரியை மட்டுமே கொடுக்காமல் தன்னுடைய புதிய ஐடியாக்களையும் சேர்த்து ஜனநாயகனை கொடுத்திருந்தார். பூஜா ஹெக்டே, மமிதா, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். படத்துக்கு பொதுவான ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பே கிடைத்தது.
விஜய் செம எனர்ஜி: முக்கியமாக தெலுங்கு படத்தை அப்படியே தெலுங்கு படம் மாதிரியே ரீமேக் செய்து வைத்திருக்கிறார்கள்; மசாலா வாசனை எல்லாம் ஓவர் நெடி அடிக்கின்றன; ஒருகட்டத்துக்கு மேல் பார்க்கவே முடியவில்லை என்று கழுவி கழுவி ஊற்றினார்கள். அதேசமயம் விஜய்யின் எனர்ஜிதான் படத்தை ஒட்டுமொத்தமாக தாங்கவும் செய்திருக்கிறது; காப்பாற்றவும் செய்திருக்கிறது. எமோஷன், ஆக்ஷன் என அத்தனை ஏரியாக்களிலும் தான் ஒரு கில்லி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
ஏமாற்றத்தில் ரசிகர்கள்: விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி தீர்க்கிறார்கள்தான். ஆனால் பொதுவான ரசிகர்கள் காண்டகிவிட்டார்கள். இனிமேல் வினோத் பெரிய ஹீரோக்களுடன் படமே செய்ய வேண்டாம்; அவரது நிலைமையை பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது என்றெல்லாம் ஓபனாகவே சோஷியல் மீடியாவில் சொல்கிறார்கள். இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த நிலவரத்தை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது.
ஜனநாயகன் வசூல்: அதன்படி ஒன்பதாவது நாளான நேற்று அப்படம் மொத்தம் 4,165 காட்சிகள் திரையிடப்பட்டு மூன்று கோடியே 55 லட்சம் ரூபாய்தான் வசூலித்திருக்கிறதாம். எட்டாவது நாளை ஒப்பிடுகையில் இது கிட்டத்தட்ட 12 விழுக்காடு குறைவு. 8வது நாள் 4.05 கோடி ரூபாயை வசூலித்திருந்ததாக அந்த இணையதளம் கூறுகிறது. ஆகமொத்தம் ஒன்பது நாட்களில் இதுவரை 183.45 கோடி ரூபாயை கலெக்ட் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் சில நாட்கள் படத்துக்கு வசூலில் மாஸான ரெஸ்பான்ஸ் இருந்தாலும்; போகப்போக டல்லடிக்க தொடங்கிவிட்டது. இதனால் 300 கோடி ரூபாயை வசூலிப்பது கொஞ்சம் கடினமானதாகவே பார்க்கப்படுகிறது. கடைசி படம் வசூலில் பெரிய சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கிறது.