Jana Nayagan: "என் காட்சிகள் நீக்கப்பட்டது வேதனையா இருக்கு; அதிர்ஷ்டமில்லாதவளாக..."
Jana Nayagan: "என் காட்சிகள் நீக்கப்பட்டது வேதனையா இருக்கு; அதிர்ஷ்டமில்லாதவளாக..." - நடிகை ஆனந்தி
ரத்னகுமாரின் '29', சூர்யாவின் 'கருப்பு', விஜய்யின் 'ஜனநாயகன்' என அடுத்தடுத்து அவர் நடித்த திரைப்படங்களில், அவர் நடித்த காட்சிகள் எடிட்டிங்கில் நீக்கப்பட்டுள்ளன.
நடிகை ஆனந்தி கண்கலங்கியவாறு அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தக் காணொளியில் அவர், "நான் நிறையத் திரைப்படங்களில் நடிக்கிறேன்; ஆனால், அக்காட்சிகள் படத்தொகுப்பில் நீக்கப்படுகின்றன. அதற்காக நான் என்றைக்குமே பெரிய அளவில் வருத்தப்பட்டதில்லை.
ஆனால், 'ஜனநாயகன்' திரைப்படத்தில் நான் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது எனக்கு மிகவும் மனவேதனையைத் தருகிறது. ஏனெனில், என்னுடைய கம்பேக்கிற்குப் பிறகு நான் முதன்முதலில் ஒப்பந்தமான திரைப்படம் இதுதான்.
இந்த ஒரு திரைப்படத்தின் வெளியீட்டிற்காக மட்டுமே கடந்த ஒன்றரை ஆண்டாக நான் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அதுவும் விஜய் சாருடன் இணையக்கூடிய காட்சிகள் என்பதால் என் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருந்தது.
உண்மையிலேயே நான் திரைப்படங்களில் நடிக்க வந்த நோக்கமே தளபதி விஜய்யுடன் ஒரே ஒரு திரைப்படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற ஆசையினால்தான். அது என்னுடைய நீண்ட நாள் கனவாகவும் இருந்தது.
திரைப்படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது; அனைவரும் கண்டிப்பாகத் திரையரங்கிற்குச் சென்று பாருங்கள். முக்கியமாகப் பெண்கள் முன்னேற்றத்தை மையப்படுத்தித் திரைப்படம் மிகச் சிறப்பாக உருவாகியுள்ளது.
A post shared by Cinema Vikatan (@cinemavikatan)
'சரி, அடுத்து விஜய் சார் நடிக்கவிருக்கும் திரைப்படங்களில் முயற்சி செய்து நடிக்கலாம்' என்று நினைக்கக்கூட முடியாது. ஏனெனில், இதுதான் அவருடைய கடைசித் திரைப்படம்!
'நம்முடைய காட்சிகளும் வரும், தளபதியோடு சேர்ந்து நாம் நடித்ததைத் திரையில் பார்க்கப் போகிறோம்' என்ற மிகுந்த மகிழ்ச்சியோடுதான் திரையரங்கிற்குச் சென்றேன்.
ஆனால், அந்தக் காட்சிகள் நீக்கப்படும் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அந்த வகையில் என்னை நினைத்து நான் மிகவும் அதிர்ஷ்டமில்லாதவளாக உணர்கிறேன்" எனப் பேசியுள்ளார்.