Jana Nayagan: ஜன நாயகன் பாக்ஸ் ஆபீஸில் அடிவாங்க காரணம் விஜய் ரசிகர்களா? கடைசி படம் இப்படி ஆகிப்போச்சே
சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கு பின் வெளியான கடைசி திரைப்படம் என்ற எதிர்பார்ப்பில் வெளியான 'ஜன நாயகன்' படம், வசூல் ரீதியாக எதிர்பார்த்த உச்சத்தை எட்டவில்லை. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
வெளியான முதல் வாரத்தில் என்பதை விட முதல் மூன்று நாட்களில் நல்ல ஓப்பனிங் கிடைத்தாலும், அடுத்தடுத்த நாட்களில் வசூல் வேகம் குறைந்தது. எட்டாவது நாளில் படத்தின் உலகளாவிய வசூல் சுமார் ரூ.265 கோடி என்ற நிலையில் இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் கடைசி படம் என்பதால் ஆயிரம் கோடி வசூலை எட்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில், அந்த இலக்கை நோக்கி படம் நகரவில்லை. அதுவும் விஜய் முதலமைச்சர் ஆன பின்னர் அவரது கடைசி படம் அவரது கெரியர் பெஸ்ட்டாக கூட மாறாதது ஏன் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.
இதையடுத்து சமூக வலைதளங்களில் பல்வேறு காரணங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அதில் அதிகம் பேசப்படும் கருத்து என்னவென்றால், பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் மற்ற நடிகர்களின் ரசிகர்களுடன் கடுமையான ரசிகர் மோதல்களில் ஈடுபட்டது, தற்போது படத்தின் வரவேற்பிலும் மறைமுக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்பதுதான். நாங்கள் வம்பு இழுக்காத ஏரியாவே இல்லை என்பது போல அஜித் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள், தனுஷ் ரசிகர்கள், சூர்யா ரசிகர்கள், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் என ஆல் ஏரியாவிலும் வம்பு இழுத்து வைத்துள்ளார்கள்.
ரசிகர்கள் தான் முதன்மை காரணமா?: சினிமா வட்டாரங்களில் பேசப்படுவது என்னவென்றால், ஒரு பெரிய நட்சத்திரத்தின் படம் வெற்றி பெற வேண்டும் என்றால் அவரது ரசிகர்கள் மட்டும் படம் பார்த்தால் போதாது. பொதுமக்கள், குடும்ப ரசிகர்கள், மற்ற நடிகர்களின் ரசிகர்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆதரவும் அவசியம். அந்த வகையில், சமூக வலைதளங்களில் நீண்ட காலமாக நீடித்த ரசிகர் மோதல்கள், சில நடுநிலை ரசிகர்களை படம் பார்க்கும் ஆர்வத்திலிருந்து விலக்கியிருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
அதேநேரத்தில், இதுவே ஒரே காரணம் என்றும் கூற முடியாது. படம் வெளியாவதற்கு முன்னர் இணையத்தில் முழுப் படமும் ஹெச்டி தரத்தில் லீக் ஆனது. இதனால் பலர் ஆன்லைனிலேயே படம் பார்த்ததால் திரையரங்குக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்திருக்கலாம் என்ற வாதமும் உள்ளது.
குடும்ப ரசிகர்கள்: மேலும், படத்திற்கு வழங்கப்பட்ட 'A' சான்றிதழும் குடும்ப ரசிகர்களின் வருகையை ஓரளவு பாதித்ததாக திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் கருத்துகள் முன் வைக்கப்படுகிறது. சிறுவர்களை அழைத்து வர முடியாத சூழல் ஏற்பட்டதால் குடும்ப ஆடியன்ஸ் குறைந்ததாகவும் கூறப்படுகிறது.
படத்தில் இருக்கும் பிரச்னை: இதுமட்டுமல்லாமல், படத்தின் திரைக்கதை, அரசியல் பின்னணி, வெளியீட்டைச் சுற்றிய விவாதங்கள் ஆகியவையும் வசூல் வேகத்தை பாதித்திருக்கலாம் என்று சினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் நடந்த நீண்டகால மோதல்கள், பைரசி, 'A' சான்றிதழ், கலவையான விமர்சனங்கள் என பல காரணங்கள் ஒன்றாக சேர்ந்ததால்தான் 'ஜன நாயகன்' எதிர்பார்த்த அளவிலான பாக்ஸ் ஆபீஸ் சாதனையை நிகழ்த்த முடியவில்லை என்ற விவாதம் தற்போது இணையம் முழுவதும் பரவி வருகிறது. விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகியும் அவரது கடைசி படம் அவருக்கு அவரது கெரியரில் பெஸ்ட் படமாக மாறாதது விவாதமாக மாறி உள்ளது.