📅 Tuesday, 13 October 2026 IST | புரட்டாசி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 13, 2026 11:01 AM

ஜெயிலர் 2வுக்கு ஸ்கெட்ச்?.. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா

ஜெயிலர் 2வுக்கு ஸ்கெட்ச்?.. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா

ஹைதராபாத்: நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும், நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகும் இரண்டு பேரும் பிஸியாக நடித்துவரும் சூழலில்; நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை சந்தித்தார்கள். இந்நிலையில் அந்த சந்திப்பின் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் ஜோடியாக நடித்தார்கள். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. முக்கியமாக ரக்‌ஷித் ஷெட்டியுடன் ராஷ்மிகாவுக்கு பிரேக்கப் ஏற்பட்டபோது விஜய் தேவரகொண்டாதான் முழு ஆதரவாகவும் இருந்திருக்கிறார். அதுதான் இரண்டு பேருக்குள்ளும் காதல் மலர்வதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சில மாதங்களுக்கு முன்புதான் அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது.

திருமணத்துக்கு பின் பிஸி: திருமணத்துக்கு பின்பும் இரண்டு பேரும் நடிப்பில் படு பிஸியாக இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடித்திருக்கும் ரணபாலி திரைப்படம் வரும் 16ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அதற்கான ப்ரோமோஷன் பணிகள் எல்லாம் சூடுபிடித்திருக்கின்றன. இந்தப் படத்துக்கு எதிராக வேண்டுமென்றே நெகட்டிவிட்டியை பரப்புகிறார்கள், ஜெயிலர் 2வை பார்க்க சொல்கிறார்கள் என்று விஜய் தேவரகொண்டா சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.

விஜய்யுடன் சந்திப்பு: சூழல் இப்படி இருக்க விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் நேற்று சென்னைக்கு ஜோடியாக வந்தார்கள். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை சந்திக்கும் அப்பாயிண்ட்மென்ட் கிடைத்ததால்; அவரது வீட்டுக்கு சென்று சந்தித்தார்கள். அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்ற விஜய்; திருமணத்துக்கும், வெளியாகவிருக்கும் ரணபாலிக்கும் தன்னுடைய வாழ்த்தை தெரிவித்து நலம் விசாரித்ததாக தெரிகிறது.

ராஷ்மிகா போஸ்ட்: இந்தச் சந்திப்பு குறித்து ராஷ்மிகா மந்தனா தனது எக்ஸ் பக்கத்தில், "நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் சாரை சந்திக்க சென்றேன். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவருடைய தீவிர ரசிகையாக, அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்று, இன்று முதலமைச்சராக இருப்பதை பார்த்து வியந்து பாராடுவது வரை அவருடைய பயணம் நம்ப முடியாத அளவுக்கு வியப்பானது. எப்போதும் உங்கள் மீது பேரன்பு உண்டு சார்" என குறிப்பிட்டிருந்தார்.

என்ன காரணம்?: இந்நிலையில் இந்த சந்திப்பின் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதாவது, ஜெயிலர் 2வும், ரணபாலியும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகவிருக்கின்றன. தன்னுடைய படத்துக்கு எதிராக நெகட்டிவிட்டியை பரப்புகிறார்கள் என சொன்ன விஜய் தேவரகொண்டா; முதலமைச்சர் விஜய்யை சந்திப்பதன் மூலம், ஏற்கனவே ரஜினி மீது காண்டில் இருக்கும் விஜய்யின் ரசிகர்களை எப்படியாவது தன் படத்துக்கு ஈர்த்துவிடலாம்; ஜெயிலர் 2வுக்கு ஈடு கொடுக்க இதுதான் வசதியாக இருக்கும் என்ற முடிவில்தான் இந்த சந்திப்பை அவர்கள் நிகழ்த்தினார்கள் என்று திரைத்துறையிலிருந்து தகவல்கள் வருகின்றன.

ஆசை பலிக்குமா?: ஒருவேளை அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், அவரது பிளான் பலிக்குமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ரஜினியை விஜய் ரசிகர்கள் எதிர்க்கிறார்கள்தான்; ஆனால் அந்தப் படத்தை கிண்டல் செய்வதற்காகவாவது ஜெயிலர் 2வைத்தான் முதலில் அதிகம் பார்ப்பார்கள். அதற்கு பிறகுதான் அவர்களது கவனம் ரணபாலிக்கு திரும்பும்; எனவே விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் பிளான் ஒர்க் அவுட் ஆக வாய்ப்புகள் குறைவு என்றே விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.