📅 Friday, 14 August 2026 IST | ஆடி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 14, 2026 08:03 AM

ஜடேஜா பேட்டை வாள் போல் சுழற்றி கொண்டாடுவது எரிச்சலை தரும்.. இங்கிலாந்து வீரர் கருத்து

ஜடேஜா பேட்டை வாள் போல் சுழற்றி கொண்டாடுவது எரிச்சலை தரும்.. இங்கிலாந்து வீரர் கருத்து

ஜடேஜா பேட்டை வாள் போல் சுழற்றி கொண்டாடுவது எரிச்சலை தரும்.. இங்கிலாந்து வீரர் கருத்து

லண்டன்: இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் புகழ்பெற்ற sword celebration கொண்டாட்டம் தமக்கு எரிச்சலூட்டியதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார். ஜடேஜாவின் ஆட்டம் இங்கிலாந்து அணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்றும் மற்றொரு இங்கிலாந்து வீரரான பிராட் பாராட்டினார்.

ஜடேஜா பேட்டிங்கில் மைல்கற்களை எட்டும்போது, தனது பேட்டை வாளைப் போல சுழற்றி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தனது ராஜ்புட் பின்னணியை வெளிப்படுத்தும் வகையில் அவர் இவ்வாறு கொண்டாடுவதாகக் கூறப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் ஜடேஜாவுடன் பலமுறை களத்தில் மோதியுள்ள பிராட், அரைசதம் அடித்ததற்கே ஜடேஜா இவ்வாறு பெரிய அளவில் கொண்டாடுவது தமக்கு தேவையற்ற ஒன்றாகத் தெரிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "அவரது கொண்டாட்டம் எனக்கு சற்று எரிச்சலை ஏற்படுத்தும். வெறும் 50 ரன்கள் எடுத்ததற்கே இவர் ஏன் இப்படி பேட்டை சுழற்றுகிறார் என்று தோன்றும். பேட்ஸ்மேன்களின் சராசரியே 50 ரன்களாக இருக்கும்போது, நீங்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று சில முறை ஜடேஜாவிடமே நான் கூறியிருக்கிறேன். இது ஒரு ஸ்டைல்தான் என்றாலும், சதம் அடிக்கும்போது இதை அவர் செய்திருக்கலாம் என்பதே என் கருத்து" என்று பிராட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக ஜடேஜா மிகச் சிறந்த பேட்டிங் சாதனைகளைக் கொண்டுள்ளார். அந்நாட்டுக்கு எதிராக பேட்டிங்கில் 40-க்கும் அதிகமான ரன் சராசரியைக் கொண்டுள்ள அவர், 3 சதங்கள் மற்றும் 11 அரைசதங்களை விளாசியுள்ளார்.இந்த உரையாடலில் பங்கேற்ற இங்கிலாந்தின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், இக்கட்டான சூழ்நிலைகளில் சிறப்பாக விளையாடும் 37 வயதான ஜடேஜாவின் திறமையை வெகுவாகப் பாராட்டினார்.

"அவரை எதிர்கொள்வது மிகவும் கடினம், குறிப்பாக இந்தியாவில் அவர் ஒரு சிம்ம சொப்பனம். கடினமான சூழ்நிலைகளில் அவர் எப்போதும் அணிக்கு பக்கபலமாக நின்று விளையாடுவார். அணிக்கு ரன்கள் தேவைப்படும்போது அவர் பேட்டிங்கில் கைகொடுத்துள்ளார்" என்று பட்லர் கூறியுள்ளார்.

மேலும், தேவைப்பட்டால் ஜடேஜா பேட்டிங் வரிசையில் முன்னதாக களம் இறங்கக்கூடியவர் என்பதையும் பட்லர் சுட்டிக்காட்டினார். "அவர் பல வகை ஆற்றல் கொண்டவர். சில சமயங்களில் பந்து ஸ்விங் ஆகும் நேரத்தில் 5-வது வீரராக களம் இறங்குவார். அவர் ஒரு குறைத்து மதிப்பிடப்பட்ட பேட்ஸ்மேன்" என்றும் பட்லர் கூறினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராகவும், அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராகவும் ரவீந்திர ஜடேஜா கருதப்படுகிறார். சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களையும் சேர்த்து அவர் கிட்டத்தட்ட 7000 ரன்களையும் 600 விக்கெட்டுகளையும் குவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில், அவர் 25.11 சராசரியுடன் 348 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் மற்றும் 38.27 சராசரியுடன் 4095 ரன்களை எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியாவுக்குப் பிறகு 4000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகள் என்ற சாதனையை எட்டிய இரண்டாவது இந்திய வீரர் ஜடேஜா ஆவார்.