ஜூலையில் அதிக மின்கட்டண புகார்
ஜூலையில் அதிக மின்கட்டண புகார் - மூத்த அதிகாரிகள் மூலம் மறு ஆய்வு செய்ய மின்சார வாரியம் முடிவு
இந்த ஆய்வை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Published : July 29, 2026 at 9:25 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலையில் அதிக மின்கட்டணம் வந்துள்ளதாக புகார் எழுந்துள்ள சூழலில், மூத்த அதிகாரிகள் மூலம் மறு ஆய்வு செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் ஜூலை மாத மின் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் புகார்கள் வந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது புகார்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து, மின் நுகர்வு கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை மூத்த அதிகாரிகள் மூலம் மறு ஆய்வு செய்ய, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அருண் ராய் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ‘தமிழ்நாட்டில் கோடை வெப்பம் இன்னும் குறையாமல் உள்ளதால், மின் நுகர்வு பயன்பாடு அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதம் வழங்கப்பட்ட மின் கட்டணத்துடன் ஒப்பிடும்போது, ஜூலை மாதம் மின் நுகர்வில் அதிக மாற்றம் காணப்பட்டதாக 3 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.
மேலும், இந்த ஆய்வில் தலைமைப் பொறியாளர் 25 இணைப்புகளையும், மேற்பார்வைப் பொறியாளர் 50 இணைப்புகளையும், கோட்டப் பொறியாளர் 75 இணைப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.
அதேபோல், துணை நிதி கட்டுப்பாட்டாளர் 50, உதவி கோட்டப் பொறியாளர் 100, வருவாய் புலனாய்வு பிரிவு கணக்கு அலுவலர் 150, மூத்த மதிப்பீட்டு அலுவலர் 150, வருவாய் பிரிவு உதவி கணக்கு அலுவலர் 100, மதிப்பீட்டு அலுவலர் 150 மற்றும் உதவிப் பொறியாளர் 100 மின் இணைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த ஆய்வின்போது ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால், அவற்றை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அருண் ராய் தெரிவித்துள்ளார்.
இதனால், மின் கட்டணம் குறைய வாய்ப்புள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.