📅 Sunday, 29 November 2026 IST | கார்த்திகை 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu November 29, 2026 04:30 PM

காசியில் 50 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் வெளியீடு

காசியில் 50 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் வெளியீடு

சென்னை: ஐந்தாவது காசி தமிழ் சங்கமம் வாரணாசியில் சனிக்கிழமை (28.11.2026) துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது அவர், 10 வெளிநாட்டு மொழிகள் உட்பட 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் பதிப்புகளை வெளியிட்டார்.

காசிக்கும் தமிழ்நாட்டிற்குமான பல்லாயிரம் ஆண்டுகால நாகரிக, பண்பாட்டு, ஆன்மிக உறவுகளைப் பெருங்கூட்டத்தில் அவர் வலியுறுத்தினார்.

காசியை உலகின் ஆன்மிகத் தலைநகரமாகக் குறிப்பிட்ட அவர், அந்நகருக்குச் சென்று பாபா விஸ்வநாதரை தரிசிப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆழமான ஆன்மிக நம்பிக்கை என்றார்.

இந்தத் திட்டத்தைத் தொடங்கியதில் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையைச் சுட்டிக்காட்டிய அவர், காசி தமிழ் சங்கமம் வெறும் பண்பாட்டு நிகழ்வாக இல்லாமல் தேசிய இயக்கமாக வளர்ந்துள்ளது என்றார்.

‘திருக்குறள் பயில்வோம்’ என்ற இவ்வாண்டுக் கருப்பொருள், இந்நூலின் அறநெறிகளையும் காலத்தால் அழியாத ஞானத்தையும் மாணவர்களிடமும் இளையர்களிடமும் கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சமத்துவம், மனிதநேயம், நேர்மை ஆகியவற்றுக்கான உலகளாவிய வழிகாட்டியாகத் திருக்குறளைக் குறிப்பிட்ட ராதாகிருஷ்ணன், அது 50 மொழிகளில் கிடைப்பது தமிழ் இலக்கியத்துக்குப் பெரும் மைல்கல் எனப் பாராட்டினார்.

மொழி இணக்கத்தைக் கடைப்பிடிக்கக் குடிமக்களை வலியுறுத்திய அவர், மக்கள் தாய்மொழியில் பெருமை கொள்ள வேண்டும், பிற மொழிகளையும் மதிக்க வேண்டும் என்றார்.

இளைய தலைமுறையினர் தேசிய ஒற்றுமையைக் காக்குமாறு அழைப்பு விடுத்த அவர், பெருந்தலைவர் காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போன்ற தலைவர்களிடமிருந்து ஊக்கம் பெறுமாறு வலியுறுத்தினார்.

இந்தியாவின் தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்தில் நம்பிக்கை தெரிவித்த ராதாகிருஷ்ணன், கங்கை நீர் காவிரியைச் சென்றடையும் எதிர்காலத்தைக் கற்பனை செய்தார்.