காசு கொடுத்து ஓட்டு வாங்கும் நச்சு கலாசாரத்தை ஒழித்துள்ளோம்: முதல்வர் விஜய் பெருமிதம்
சென்னை: ''இந்த தேர்தலில், ஜாதி, மதம் மட்டுமின்றி, காசு கொடுத்து ஓட்டு வாங்கும் நச்சு கலாசாரத்தையும் சுக்கு நுாறாக துாள் துாளாக உடைத்துள்ளோம். வெளிப்படையான ஊழலற்ற ஆட்சியை, 100 சதவீதம் வழங்குவோம்,'' என, முதல்வர் விஜய் பேசினார்.
கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, முதல்வர் விஜய் பேசியதாவது: இந்த, 17வது சட்ட சபையில், 12 கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் இடம் பெற்றுள்ளனர். கொள்கை, நிலைப்பாடு ரீதியாக வேறுபாடு இருந்தாலும், மக்கள் பணி செய்வது தான் அனைத்து கட்சிகளின் நோக்கம்.
மக்கள் சேவை என்ற நோக்கத்திலும், மாநிலம் சார்ந்த விஷயத்திலும் ஒன்றிணைந்து பயணித்தால், தமிழகம் முதன்மை மாநிலமாக திகழும். எதிர்த்து பேசினால் தான் எதிர்க்கட்சி என நிரூபிக்க முடியும் என்று நினைத்து, கவர்னர் உரையில் எதிர்க்கட்சி தலைவர் பேசியுள்ளார்.
நான் ஷூட்டிங்கில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வந்த மாதிரி பலரும் சொல்கின்றனர். அது, 'ரீல்' தான், 'ரியல்' கிடையாது. சாதாரண நடிகராக என் பயணம் தொடங்கியது. கடுமையாக உழைத்து மேலே வந்துள்ளேன். அதற்கு நான் மட்டும் காரணமல்ல. தமிழக மக்களின் அன்பும், அரவணைப்புமே காரணம். எல்லாரும் கட்சி ஆரம்பித்து விட்டுத்தான் ஒவ்வொரு வீட்டுக்கும் போவார்கள்.
நான் ஒவ்வொரு வீட்டிற்கும் போன பின்னரே கட்சி ஆரம்பித்தேன். தமிழக மக்களின் மனதிற்குள் போவதற்குள், நான் பட்டபாடு எனக்கு மட்டுமே தெரியும். இது புரிந்தாலும், புரியாதது போல, அது நடிகர் கட்சி என்று நக்கல், நையாண்டி பேசுகின்றனர். கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்து, 35 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளோம். மொத்தம் 1.72 கோடி பேர் ஓட்டளித்து, தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.
தமிழக மக்களின் ஆதரவுடன் ஆளும் கட்சியாக, த.வெ.க., சட்டசபையில் அமர்ந்துள்ளது. இது, சாதாரணமாக நடக்கவில்லை.
இந்த இரண்டே கால் ஆண்டில், வலியும் வேதனையும் அதிகம். கரூர் உயிர் பலி சம்பவத்திற்கு எங்கள் மீதே பழியை போட்டனர். அரசியல் என்றால், இப்படித்தான் கொடூரமாக இருக்க வேண்டுமா?
இந்த விஜய் மக்களுக்காக எதையும் தாங்க தயாராகி விட்டான். எனக்கு ஆறுதலாக இருப்பது மக்களும், தொண்டர்களும் மட்டுமே. மகத்தான கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளோம். இளைஞர்கள், பெண்களால் என்ன செய்ய முடியும் என்று கேட்டவர்களுக்கு பதில் தான் இந்த ஆட்சி.
ஒரு குடும்பம் மட்டும் முக்கியமல்ல; ஒவ்வொரு குடும்பமும் முக்கியம். இந்த தேர்தலில், ஜாதி, மதம் மட்டுமின்றி, காசு கொடுத்து ஓட்டு வாங்கும் நச்சு கலாசாரத்தையும் சுக்கு நுாறாக, துாள் துாளாக உடைத்து உள்ளோம்.
வெளிப்படையான ஊழலற்ற ஆட்சியை, 100 சதவீதம் வழங்குவோம் என்பது, இப்போது மக்களுக்கு புரிந்திருக்கும். இது ஆரம்பம் தான். மக்கள் கொஞ்சம் அவகாசம் வழங்க வேண்டும்.
கடந்த 2017 முதல் 2026ம் ஆண்டு வரை, ஆட்சியில் இருந்த புண்ணியவான்கள், ஒவ்வொரு துறையிலும் போட்ட ஓட்டைகளை அடைத்து, படிப்படியாக மக்களுக்கு நல்லதை செய்வோம்.
நம்மை எதிர்க்க யார் யாரோ ஒன்றாக சேருகின்றனர். நம் ஆட்சிக்கு தேதி குறிக்கின்றனர். அவர்களை மக்கள் பார்த்துக் கொள்வர். இந்த அரசு பொறுப்பேற்ற, 40 நாட்களில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, 200 யூனிட் இலவச மின்சாரம், போதைப் பொருள் தடுப்பு படை உள்பட பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.
பத்திரப்பதிவு துறையில் பகல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். சட்டவிரோத கல் குவாரிகள், கனிமவள கடத்தலை தடுத்துள்ளோம். மதுபான கடைகளை மூடியுள்ளோம். அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் அற்ற பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
லஞ்சம், ஊழல் இல்லாத, பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை தருவதே, எங்களது ஒரே நோக்கம். இவ்வாறு முதல்வர் பேசினார்.