📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 18, 2026 06:01 PM

காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைத்ததற்கு எ.வ. வேலு எதிர்ப்பு

காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைத்ததற்கு எ.வ. வேலு எதிர்ப்பு

தமிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.

இதில் எதிர்க்கட்சி திமுகவை சேர்ந்த கொறடா எ.வ.வேலு பேசுகையில்,

"சென்னை வள்ளுவர் கோட்டம் முதல் குமரி வள்ளுவர் சிலை வரை கலைஞரின் அடையாளம் இல்லா ஊரே இல்லை.

விடுதலை போராட்ட வீரர்களுக்கு சிலைகள், மணிமண்டபங்கள் அமைத்து தந்தோம். பெரியார் கொள்கை தலைவர் என தவெக தம்பட்டம் அடித்துக்கொள்கிறது. 3 மாத காலமாக பெரியார் நூலகத்தை கிடப்பில் போட்டது ஏன்?

அறிவாலயத்தில் பெரியார் சிலை இல்லை. எங்கள் கட்சி அலுவலகத்தில் பெரியாருக்கு சிலை இருக்கிறது. கோவை தந்தை பெரியார் நூலகத்தை திறக்க வேண்டும்.

மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் தான் கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தோம். காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டிய அவசியம் என்ன?.

புதிய திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைத்தால் அதை வரவேற்கிறோம். ஆனால் முதலமைச்சர் என்ற பொதுவான சொற்றொடரை நீக்கிவிட்டு காமராஜர் பெயரை வைக்க வேண்டிய அவசியம் என்ன? திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டபோது ஏன் இதற்கு மு.க. ஸ்டாலின் காலை உணவுத் திட்டம் என பெயர் வைக்கக்கூடாது எனக் கேட்டேன்.

அதற்கு அப்போது முதல்வராக இருந்த ஸ்டாலின், முதலமைச்சர் என்று வைத்தால் ஒரு தனிப்பட்ட நபரை குறிக்காமல் அடுத்து வரும் அனைத்து முதல்வர்களையும் குறிக்கும், அந்த பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறியதாக எ.வ. வேலு தெரிவித்தார்.

உடனே எழுந்த அவை முன்னவர் செங்கோட்டையன், "மானியக்கோரிக்கையை விட்டுவிட்டு காலை உணவு குறித்து பேசுவது ஏன்?" என கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து மானிய கோரிக்கை பற்றி மட்டுமே பேச வேண்டும் என சபாநாயகர் கண்டித்தார்.