📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 18, 2026 06:01 PM

3 தமிழர்கள் சுட்டுக்கொலை விவகாரம்: அமைச்சரை கண்டித்த சபாநாயகர்..!

3 தமிழர்கள் சுட்டுக்கொலை விவகாரம்: அமைச்சரை கண்டித்த சபாநாயகர்..!

3 தமிழர்கள் சுட்டுக்கொலை விவகாரம்: அமைச்சரை கண்டித்த சபாநாயகர்..!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது, அமைச்சர் நிர்மல்குமார் அரசியல் ரீதியான கருத்தை தெரிவித்த நிலையில், அதற்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அருகே வனப்பகுதிக்குள் கால்நடைகளை தேடிச் சென்ற 3 தமிழர்கள் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர். அவர்கள் மான் வேட்டையில் ஈடுபட்டதாக கர்நாடக வனத்துறை தரப்பில் கூறப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. திமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட உறுப்பினர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, இரு மாநில எல்லைப் பகுதியில் சம்பவம் நடைபெற்றுள்ளதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் கர்நாடக அரசுடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பாமக எம்எல்ஏ கணேஷ்குமாரும் சிபிஐ விசாரணையை வலியுறுத்தியதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் நிர்மல்குமார் பதிலளிக்க எழுந்தபோது, விவாதத்தின் முக்கிய பொருளில் இருந்து விலகி அரசியல் கருத்து தெரிவித்தார். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் ஒரே நம்பிக்கை முதலமைச்சர் விஜய் தான் என அவர் குறிப்பிட்டதுடன், திமுகவை விமர்சிக்கும் வகையிலும் கருத்து தெரிவித்தார்.

இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக குறுக்கிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பான விஷயங்களில் மட்டுமே அமைச்சர் பேச வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், தேவையற்ற கருத்துகளை பேச அனுமதிக்க முடியாது என்று கூறிய சபாநாயகர், "யாருடைய கவனத்தை ஈர்க்க நீங்கள் பேசுகிறீர்கள் என எனக்கு தெரியவில்லை" என அமைச்சர் நிர்மல்குமாரை கண்டித்தார்.

இதனால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.