காலநிலை மாற்றத்தால் இமயமலையில் அதிகரிக்கும் நிலச்சரிவு! சுருக்கம்:
காலநிலை மாற்றத்தால் இமயமலையில் அதிகரிக்கும் நிலச்சரிவு! சுருக்கம்:
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
"நேபாள-திபெத் எல்லையில் அண்மையில் இடம்பெற்ற பேரழிவிற்குப் பனிப்பாறைமீது ஏற்பட்ட நிலச்சரிவே காரணமாக இருக்கலாம்" என்றும் "இதனால் பனிப்பாறை சரிந்து நீர், பனி, பாறைகள், சேறு மற்றும் இடிபாடுகளின் அழிவுகரமான கலவை பள்ளத்தாக்கில் கீழ்நோக்கி பாய்ந்துள்ளது" என்றும் இத்தாலிய வானிலை ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த காலநிலை ஆய்வாளர் டேனியல் கேட் பெர்ரோ அவர்கள் கூறியுள்ளார்.
இந்தக் கணக்கீடு முதற்கட்டமானது என்றும், இதனை உறுதிப்படுத்த மேலும் அறிவியல் ஆய்வுகள் தேவை என்றும் வலியுறுத்தியுள்ள கேட் பெர்ரோ அவர்கள், பரந்த உயரமான மலைப்பகுதிகள், ஏராளமான பனிப்பாறைகள் மற்றும் சிக்கலான பள்ளத்தாக்குகளைக் கொண்ட நேபாளமும் திபெத்தும் இத்தகைய பேரிடர்களுக்கு உலகின் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் ஒன்றாக உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை அமைப்புகளும் செயற்கைக்கோள் கண்காணிப்பும் மேம்பட்டு வந்தாலும், முழு இமயமலைப் பகுதியையும் போதுமான அளவு கண்காணிக்க அவை இன்னும் போதுமானதாக இல்லை என்றும் கூறியுள்ள கேட் பெர்ரோ அவர்கள், மேலும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைப் பாதுகாக்க இந்த அமைப்புகளை விரிவாக்குவது ஒரு முக்கிய முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
புவி வெப்பமயமாதல் பனிப்பாறைகள் உருகுவதையும் நிரந்தர உறைபனி உருகுவதையும் வேகப்படுத்துவதால், இதுபோன்ற பேரழிவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கக்கூடும் என்று காலநிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். உறைந்த நிலம் மலைச் சரிவுகளை நிலையாக வைக்க உதவுகிறது; அது உருகும்போது, பாறை அமைப்புகள் நிலையற்றதாக மாறி, பெரிய நிலச்சரிவுகள் மற்றும் பனிப்பாறை சார்ந்த பேரழிவுகளின் ஆபத்தை உயர்த்தக்கூடும்.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் 2025-இல் ஏற்பட்ட பிளாட்டன் பாறை-பனிச்சரிவு மற்றும் 2017-இல் ஏற்பட்ட பிஸ்ஸோ செங்காலோ சரிவு ஆகிய நிகழ்வுகளையும் அவர் சுட்டிக்காட்டினார். பிளாட்டனில், பயனுள்ள கண்காணிப்பு மற்றும் ஆரம்பகால வெளியேற்றம் ஆகியவை உயிரிழப்புகளைப் பெருமளவில் குறைத்தன.
உலகெங்கிலும் உள்ள உயரமான மலைப்பகுதிகளில் வலுவான காலநிலை கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை அமைப்புகள் மற்றும் பேரழிவுக்கான தயார்நிலை ஆகியவற்றின் அவசியத்தை நேபாள பேரழிவு சுட்டிக்காட்டுகிறது.