📅 Saturday, 29 August 2026 IST | ஆவணி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 28, 2026 11:04 PM

அமைச்சருடன் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு பேச்சுவார்த்தை எதிரொலி

அமைச்சருடன் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு பேச்சுவார்த்தை எதிரொலி

அமைச்சருடன் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு பேச்சுவார்த்தை எதிரொலி - வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

அமைச்சர் அறிவித்துள்ள 40 சதவீத ஊதிய உயர்வு போதுமானதாக இல்லை என்றும், குறிப்பாக பெருநகரங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு தேவை என்றும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

Published : August 28, 2026 at 1:51 PM IST

சென்னை: தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நடைபெறவிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தலைமையில் டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நேற்று (ஆகஸ்ட் 27) நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனத்தில் செயல்படும் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளருமான என்.பெரியசாமி இதனைத் தெரிவித்தார்.

டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்தல், காலமுறை ஊதியம் வழங்குதல், ஓய்வூதியம், காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்கான கூடுதல் பணியாளர்களை நியமித்தல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 11 தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தன.

இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் அமைச்சருடன் ஏற்கனவே மூன்று முதல் நான்கு கட்டங்களாக தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், நேற்று இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில், ஊழியர்களுக்கு 40 சதவீத ஊதிய உயர்வு வழங்குவது குறித்தும், ஓய்வூதியம் பெறுவதற்கான வயது வரம்பை அதிகரிப்பது குறித்தும் அமைச்சர் உறுதியளித்ததாக பெரியசாமி தெரிவித்தார். மேலும், ஊழியர்களை காலமுறை ஊதியத்திற்கு மாற்றும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பாக இரண்டு நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்ததாக கூறினார்.

தவிர, டாஸ்மாக் கடைகளின் வாடகை, மின் கட்டணம், துப்புரவுப் பணிகள் உள்ளிட்ட நிர்வாகச் செலவுகளை இதுவரை ஊழியர்களே தங்களது சொந்த பணத்தில் மேற்கொண்டு வந்தனர். இனி இந்த செலவுகளை நிர்வாகமே ஏற்கும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார். இதனால், நிர்வாகச் செலவுகளுக்காக ஊழியர்கள் தங்களது சொந்த ஊதியத்திலிருந்து பணம் செலவிட வேண்டிய அவசியம் இருக்காது என்று அவர் தெரிவித்தார்.

அதேநேரத்தில், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகபட்ச சில்லறை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யமாட்டோம் என ஊழியர்களும் உறுதியளித்துள்ளனர்.

காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் பணிக்காக அக்டோபர் மாதத்தில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும், அதுவரை ஏற்படும் செலவுகளை அரசே ஏற்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பெரியசாமி கூறினார்.

இந்த கோரிக்கைகள் தொடர்பான உறுதிமொழிகளை வரும் 31ஆம் தேதி நடைபெறும் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் உறுதிபட அறிவிப்பதாக தெரிவித்துள்ளதால், இன்று நடைபெற இருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

இதையடுத்து, டாஸ்மாக் மதுக்கடைகள் வழக்கம்போல் செயல்படும் என்றும், தொழிற்சங்கங்களின் இதர கோரிக்கைகளுக்கும் அமைச்சர் முன்னிலையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்றும் பெரியசாமி தெரிவித்தார்.