காங்கிரஸ் கட்சிக்குள் ஒரே களேபரம்: செல்வப் பெருந்தகை
வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!
காங்கிரஸ் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் , காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்திக்கும் இடையில் வெடித்துள்ள மோதல், அரசியல் வட்டாரத்தில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக விஜய் தான் பிரதமர் வேட்பாளர், விஜயை பிரதமர் நாற்காலியில் ராகுல் காந்தி அமர வைப்பார், என்று தவெகவினர் தொடர்ச்சியாக பேச ஆரம்பித்து விட்டனர்.
பதிலுக்கு காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று கூற கூட்டணிக்குள் பரபரப்பு நிலவுகிறது. ராகுலை பிரதமர் வேட்பாளராக தவெக ஏற்க வேண்டும், இல்லாவிட்டால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று காங் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் இன்று செல்வ பெருந்தகை , ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் எதற்கு கூட்டணி? ராகுல் காந்தி தான் பிரதமர் என்று சபதம் ஏற்போம். அவரை பிரதமராக நேர்மையாக ஒப்புக் கொள்பவர்களுடன் கூட்டணி அமைப்பதுதான் நேர்மை" என்று கூறியிருந்தார். அவரது பேச்சை தொடர்ந்து கூட்டணிக்குள் குழப்பம் இருப்பதாக பல்வேறு கருத்துகளும் எழுந்தது.
இதற்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி "அவரு யாருங்க இப்போ? முன்னாள் , எதுக்கு தேவையில்லாம வேஸ்ட்டா? கடந்த காலத்தில் என்ன வேணுமானாலும் நடந்திருக்கலாம். அதெல்லாம் இப்போது அவசியமே கிடையாது. கூட்டணிக்குள் எந்த குழப்பமும் இல்லை," என்று கூறியிருந்தார்.
பிரவீன் சக்கரவர்த்தியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள செல்வப் பெருந்தகை ," கூட்டணி பற்றி பேச நான் யார்? என்று ஒரு அறிவு ஜீவி கேட்கிறார். வட மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் சென்ற இடத்தில் தண்ணீர் விட்டு கழுவிய மதவாதம் மேட்டுக் குடியின் மனநிலையை அவர் காட்டுகிறார்.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத எவரோடும் கூட்டணி எதற்கு என்பதே என் கேள்வி? இதைக் கேட்டால் , நீண்ட நேரம் முதல்வர் சிரித்து பேசுகிறார் என்கிறார் அந்த அறிவுஜீவி.
இதுதான் கூட்டணியில் தொடர்வதற்கான ஒப்பந்தமா? முதல்வர் ஒரே ஒருமுறை ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறினால் பிரச்சனை அனைத்தும் தீர்ந்து விடுமே. இதை முதல்வர் கூட சொல்ல வேண்டாம் அந்த கட்சியின், முக்கியப் பொறுப்பாளராவது சொல்லட்டுமே. அதுவும் வேண்டாம் , உங்களுடன் சிரித்து பேசிய முதல்வர், ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று நீங்கள் கூறி , அதற்கு அவர் உத்தரவாதம் தந்தாரா? என்பதையாவது சொல்லுங்களேன்.
பாஜக தலைவர்களைப் பற்றி சட்டமன்றத்தில் விமர்சித்தால் அது உடனடியாக நீக்கப்படுகிறது. உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது, உழைத்து இயக்கத்தை வளர்ப்பது தான் கடினம். காலம் பலரை முன்னிறுத்தும், அதே காலம் பலரை மறந்தும் போகும். ஆனால் , ஒரு பேரியக்கத்திற்கு நேர்மையாக உழைத்தவர்களின் பங்களிப்பை வரலாறு பதிவு செய்யும். உரக்கச் சொல்கிறேன். நான் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என விரும்பும் காங்கிரஸ் தொண்டன். சுயமரியாதையுடன் இந்த மண்ணின் மைந்தன், பூர்வகுடி" என்று பதிவிட்டு , மிகக் கடுமையாக பிரவீன் சக்கரவர்த்தியை சாடியிருந்தார்.