காதல் இல்ல.. காமம் தான் இருக்கு.. அந்த புத்தியே இல்ல.. தமிழ் சினிமாவை வெளுத்து வாங்கிய ஜோதிகா!
சென்னை: JFW விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நடிகை ஜோதிகா, இப்போ வர்ற தமிழ் படங்களில் காதல் இல்ல... வெறும் காமம்தான் இருக்கு எனத் தமிழ் திரையுலகையே அதிர வைக்கும் வகையில் பேசி இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான சூர்யா, ஜோதிகா ஜோடி இருவரும் திருமணத்திற்கு முன் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது,காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் தான். ஜோதிகா அறிமுகமான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இருவரும் சேர்ந்த நடித்த போதே காதலிக்க தொடங்கினார்கள். அதன் பின் குடும்பத்தின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது.
ஜோதிகா: திருமணத்திற்கு பின் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கவே இல்லை, இவர்களை மீண்டும் ஒன்றாகத் திரையில் பார்க்க ரசிகர்கள் பல ஆண்டுகளாக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், JFW நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஜோதிகாவிடம், பிரபல தொகுப்பாளர் மாபா ஆனந்த், நீங்களும் சூர்யாவும் சேர்ந்து எப்போது நடிக்கப் போகிறீர்கள்? என கேட்டார்.
தமிழ் சினிமாவுல ரொமான்ஸ் இல்ல: இதற்கு பதில் அளித்த ஜோதிகா, நாங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து நடிக்க நல்ல கதைக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இதுவரை யாருமே அதுபோன்ற ஒரு கதையை சொல்லவில்லை. எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவில் மிகக் குறைவான ஆட்களுக்குத்தான் ரொமான்ஸ் புத்தியே இருக்கு. அவர்கள் மட்டும்தான் அழகான ரொமான்டிக் படங்களை எடுக்கிறார்கள். இதை நான் கண்டிப்பாகச் சொல்லியே ஆக வேண்டும் என்பதற்காகத்தான் சொல்கிறேன். அதனால் தான் நான் 'சில்லுக்கருப்பட்டி' படத்தை வெகுவாகப் பாராட்டினேன். எனக்கு ரொமான்ஸ் மற்றும் காதல் படங்கள் என்றால் ரொம்பவே பிடிக்கும். ஆனால், இதுபோன்ற ரொமான்ஸ் திரைப்படங்களைத் தமிழ் சினிமாவில் பார்த்து கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
காதல் இல்ல... காமம் தான்: இப்போது வரும் படங்களில் காதல் இல்ல வெறும் காமம்தான் இருக்கிறது. ஒரு பெண்ணாக என்னுடைய பார்வையிலிருந்து அந்தப் படங்களைப் பார்க்கும்போது எனக்கு 'லஸ்ட்' மட்டும்தான் தெரிகிறதே தவிர, அதில் காதல் இல்லை தெரியவில்லை. இதனால் நானும் சூர்யாவும் சேர்ந்து ரொமான்டிக்காக, காதலை அழகாகச் சொல்லும் ஒரு திரைப்படத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு ஒரு பெண் இயக்குநர் இயக்கினால் மட்டுமே சரியாக இருக்கும் என நாங்கள் நினைக்கிறோம் என்றார்.
ரீ என்ட்ரி: சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த ஜோதிகா, குழந்தைகள் வளர்ந்த பிறகு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து அதிரடியான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது தமிழை விட ஹிந்தியிலேயே அதிக கவனம் செலுத்தி வரும் இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஸ்ரீகாந்த், சைத்தான் படங்கள் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூலைக் குவித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.