காவிரி நீர் திறப்பு - ‘முதல்வர் விஜய் சாதனை’ என கர்நாடக வாகனங்களுக்கு மாலை அணிவித்து த.வெ.க
காவிரி நீர் திறப்பு - ‘முதல்வர் விஜய் சாதனை’ என கர்நாடக வாகனங்களுக்கு மாலை அணிவித்து த.வெ.க-வினர் கொண்டாட்டம்
கனமழையால் கர்நாடாகவில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தவிர்க்கவும், அணைகளின் பாதுகாப்பு கருதியும் தற்போது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டிக்கிறது.
Published : August 3, 2026 at 10:42 AM IST
விழுப்புரம்: கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து காவிரியில் நீர் திறக்கப்பட்டது ‘முதலமைச்சர் விஜய்யின் சாதனை’ என்று முழக்கமிட்டபடி, அம்மாநில வாகனங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் (த.வெ.க) மாலை அணிவித்து, ஓட்டுநர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவில் மழை பெய்யாததால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்படாது என கர்நாடக அரசு மறுத்தது. இதனால் டெல்டா மாவட்டங்கள் வறண்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக வாகனங்களுக்கு TVK வரவேற்பு #villupuram | #cauverywaterissue | #karnatakavehicles | #cmvijay | #EtvBharatTamilNadu pic.twitter.com/ZsNlTGjQwK
எனவே, டெல்டா விவசாயத்தை கருத்தில்கொண்டு தமிழ்நாட்டுக்கு 3,500 கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடும்படி, ஜூலை 28ஆம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்தது. ஆனால் தங்கள் மாநிலத்தில் போதிய மழை பெய்யாததால் அணைகளில் நீர்வரத்து குறைவாக உள்ளதாக கூறி கர்நாடகா தண்ணீர் திறக்க மறுத்து விட்டது.
தொடர்ந்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் (CWNA) தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டும் கர்நாடக அரசு செவி மடுக்கவில்லை.
இதனையடுத்து மேகதாது மற்றும் காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டவேண்டுமென அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தென்மேற்கு பருவமழையால் அங்குள்ள கபினி, ஹாரங்கி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி, தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 15,000 கனஅடி நீரை கர்நாடக அரசு திறந்திருக்கிறது.
தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தினர் தமிழ்நாடு - புதுச்சேரி எல்லைப்பகுதியான கெங்கராம்பாளையம் சுங்கச்சாவடியில் கர்நாடகா செல்பவர்களின் கார்களுக்கு பூஜை செய்து மாலை அணிவித்து கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து கொண்டாடினர்.
இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த த.வெ.க விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் மோகன் பேசுகையில், “காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு பெற்று தந்த முதலமைச்சர் விஜய் வாழ்க. தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் விஜய் தான். அவர் தமிழ்நாட்டிற்கு மட்டும் தலைவர் கிடையாது. அவர் இந்திய தேசியத்திற்கே தலைவர். தமிழ்நாடு - கர்நாடக இரு மாநில மக்களும் சகோதரத்துவத்துடன் நடந்து கொள்ள வேண்டும்” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் திறக்கவேண்டிய தண்ணீரை திறக்க மறுத்ததோடு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் செயல்படுத்த மறுத்துவந்த கர்நாடக அரசு, இன்று முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரை சந்தித்துப்பேச திட்டமிட்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் பயணத்திற்கும் முட்டுக்கட்டை போட்டது.
இருப்பினும், கனமழையால் கர்நாடாகவில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தவிர்க்கவும், அணைகளின் பாதுகாப்பு கருதியும் தற்போது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.