பொழுதுபோக்கு, சுற்றுச்சூழல் பாதிப்பின்றி லாங் ஐலண்ட் பணிகள்: வீவக உறுதி
ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா கடற்கரைக்கு அப்பால் மேற்கொள்ளப்படவுள்ள ‘லாங் ஐலண்ட்’ நில மீட்புக்கான ஆயத்தப் பணிகளின்போது பொதுமக்களின் பொழுதுபோக்கு அம்சங்களும் கடல்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) உறுதி அளித்துள்ளது.
ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கைக்காகப் பெறப்பட்ட 430 கருத்துகளுக்கு வீவக புதன்கிழமை (செப்டம்பர் 16) பதிலளித்தது. பிடோக் படகுத்துறை, அலைச்சறுக்கு பகுதியான ‘லாங்காங் பாயிண்ட்’ போன்ற பொழுதுபோக்கு மையங்களின் செயல்பாடுகள், பணிகள் நடைபெறும் காலத்தில் பாதிக்கப்படக்கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆயத்தப் பணிகள் கடற்கரையிலிருந்து குறைந்தது 130 மீட்டர் தொலைவிலேயே நடைபெறும் என்பதால், பொதுமக்கள் கடற்கரைப் பகுதிகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று அதற்குப் பதிலளித்த வீவக கூறியது.
மேலும், நீரின் தரம், இரைச்சல், தூசியின் அளவு முதலியவை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அது உறுதியளித்தது.
மணல் நிரப்பும் பணிகள் குழாய் அமைப்பு மூலம் மிகுந்த கவனத்துடன் நடத்தப்படும் என்பதால் ஆழமற்ற கரைப்பகுதி உயிரினங்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.
அரிய வகை ஆமைகள் முட்டையிடும் இடங்களைப் பாதுகாக்கவும், தேவைப்பட்டால் அந்த முட்டைகளைச் ‘சிஸ்டர்ஸ் தீவு’ கடல்சார் பூங்காவிற்கு மாற்றவும் தேசிய பூங்காக் கழகத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கழகம் குறிப்பிட்டது.
எதிர்காலத்தில் கடல் மட்டம் உயர்வதிலிருந்து நிலப்பகுதியைப் பாதுகாக்கவும், புதிய நீர்த்தேக்கத்தை உருவாக்கவும் ஏறக்குறைய 800 ஹெக்டர் பரப்பளவில் ‘லாங் ஐலண்ட்’ நில மீட்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கின் பெரும் பகுதியை அடைக்கும் என்பதால் 3 மீட்டர் உயரக் கடல்சுவர் எழுப்பும் மாற்றுத் திட்டம் கைவிடப்பட்டது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
பொதுமக்களுடனான அடுத்தகட்ட கலந்தாலோசனை 2026ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.