📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 11, 2026 09:04 AM

காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு தொடர்ந்த வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் ஆக.13 விசாரணை

காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு தொடர்ந்த வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் ஆக.13 விசாரணை

காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு தொடர்ந்த வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் ஆக.13 விசாரணை

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின் படி கர்நாடக அரசு காவிரியில் நீர் திறக்காத நிலையில், சமீபத்தில் திமுக சார்பாகவும் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published : August 10, 2026 at 12:54 PM IST

புது டெல்லி: காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்குரிய நீரை உடனடியாக விடுவிக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உத்தரவுகளின்படி, தமிழ்நாட்டிற்கான உரிய நீரை கர்நாடக அரசு திறக்காததை அடுத்து, முதலமைச்சர் ச.ஜோசப் விஜயின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு இந்தியாவின் தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியவர்கள் அடங்கிய அமர்வின் முன்பு தாக்கல் செய்யப்பட்டது. இதில் தமிழ்நாடு அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ் வைத்தியநாதன், இந்த மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள கோரிக்கை விடுத்தார்.

அதனையடுத்து, இந்த மனு மீதான விசாரணை வரும் ஆகஸ்ட் 13 (வியாழக்கிழமை) அன்று எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் அமர்வு தெரிவித்ததுள்ளது.

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில், காவிரி படுகையின் நீரியல், வானிலை சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்து, தமிழ்நாட்டிற்கு ஜூலை 29 (காலை 8 மணி) முதல் 15 நாட்களுக்கு (ஆக.12 வரை) விநாடிக்கு 3,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

ஆனால், கர்நாடக அரசு நீர் திறக்காத நிலையில், விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய 26.954 டி.எம்.சி தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்தவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வழங்கிய உத்தரவை நிறைவேற்ற கோரியும் திமுக சார்பாக உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, கர்நாடகாவில் அதிக மழை பெய்த அணைகள் நிரம்பிய காரணத்தினால், அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.