📅 Saturday, 26 September 2026 IST | புரட்டாசி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 26, 2026 05:05 AM

மனித மாண்பு, உண்மை, உரையாடல் வழியாக அமைதியைக் கட்டியெழுப்புவோம்: திருத்தந்தை

மனித மாண்பு, உண்மை, உரையாடல் வழியாக அமைதியைக் கட்டியெழுப்புவோம்: திருத்தந்தை

மனித மாண்பு, உண்மை, உரையாடல் வழியாக அமைதியைக் கட்டியெழுப்புவோம்: திருத்தந்தை

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

செப்டம்பர் 25, வெள்ளியன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின் ஒரு நிகழ்வாக பாரிசில் உள்ள ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான (யுனெஸ்கோ) தலைமையகத்திற்குச் சென்றார். அப்போது திருத்தந்தை ஆற்றிய உரை:

மதிப்பிற்குரிய தலைவர்களே, அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே,

அமைதிக்கான பணியில் மொழிகளும் கலாச்சாரங்களும் ஒன்றிணையும் இந்த அனைத்துலக அவையில் இன்று உங்களுடன் இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரம் வழியாக நீதியையும், மனித உரிமைகளையும், அடிப்படைச் சுதந்திரங்களையும் மேம்படுத்துவது அமைதியை உருவாக்குவதற்கான முக்கிய வழிகளாகும் என்பதை யுனெஸ்கோ நமக்கு நினைவூட்டுகிறது. எனவே, நீதியான உலகைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சி, அனைத்துலக ஒத்துழைப்பின் மையமாகத் திகழ்கிறது. அமைதியின் சாட்சியாக உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். என்னை அழைத்தமைக்காக யுனெஸ்கோவின் தலைமை இயக்குநருக்கு நன்றி தெரிவிக்கிறேன். திருஅவையின் சார்பில், அனைத்து மக்களுடனும், நல்லெண்ணம் கொண்ட அனைவருடனும் உரையாடலைத் தொடர்ந்து மேற்கொள்ளும் ஒரு மேய்ப்பராக நான் இங்கு வந்துள்ளேன்.

1952ஆம் ஆண்டு முதல் திருப்பீடம் யுனெஸ்கோவில் பங்கேற்று வருகிறது. இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரின் பிரிக்க முடியாத மாண்பையும் மதித்துப் பாதுகாப்பதில்தான் மனிதகுலத்தின் எதிர்காலம் பெரிதும் சார்ந்துள்ளது என்ற நம்பிக்கையே இதற்கு அடிப்படையாகும். பொதுநலனைப் காப்பதிலும், உண்மையான மனித முன்னேற்றத்தை ஊக்குவிப்பதிலும் யுனெஸ்கோவை ஒரு முக்கியமான கூட்டாளியாக நாங்கள் கருதுகிறோம். கலாச்சாரம் மனிதகுலம் தன்னையும், தனது வரலாற்றையும், தனது எதிர்காலத்தையும் புரிந்துகொள்ள உதவுகிறது. கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரம் ஆகியவை அவற்றில் ஈடுபட்டுள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தாமல் உண்மையான முன்னேற்றத்தை அடைய முடியாது. நீண்டகாலக் கல்வி மரபைக் கொண்ட திருஅவை, பள்ளிகளையும் பல்கலைக்கழகங்களையும் நிறுவி, மிகவும் ஏழ்மையான மற்றும் தொலைதூரப் பகுதிகளிலும் கல்வியை வழங்கி வந்துள்ளது. ஆனால் கல்வி என்பது அறிவையும் திறமைகளையும் வழங்குவதோடு மட்டும் நின்றுவிடக்கூடாது. மனிதராக இருப்பதன் பொருள் என்ன, வாழ்வின் பொருள் என்ன என்பதை அறிந்துகொள்ளவும் அது மக்களுக்கு உதவ வேண்டும்.

இதனால் ஒரு முக்கியமான கேள்வியை நாம் எதிர்கொள்கிறோம்: மனிதராக இருப்பதன் பொருள் என்ன?

முதலாவதாக, ஒவ்வொரு மனிதரும் கருத்தரிக்கப்பட்டு பிறக்கின்ற ஒருவர். எப்போது, எங்கே, யாரிடமிருந்து பிறக்க வேண்டும் என்பதை நம்மில் எவரும் தேர்ந்தெடுக்கவில்லை. எனவே, தொடக்கத்திலிருந்தே நமது மனிதத்தன்மை ஓர் இறைவனின் கொடையும் பொறுப்பும் ஆகும். பிறப்பு நம்மை வாழ்வின் உறவால் ஒன்றிணைக்கிறது; அந்த உறவின் முதல் தளமாகவும், முதல் கல்விக்கூடமாகவும் குடும்பம் விளங்குகிறது.

இரண்டாவதாக, நாம் அனைவரும் தேவைகளோடு பிறக்கிறோம். உணவு, பராமரிப்பு, அன்பு மற்றும் வாழ்வுக்கு அர்த்தம் அளிக்கும் வார்த்தைகள் நமக்குத் தேவை. இந்தப் பொதுவான பலவீனத்தை நாம் மறந்துவிடும்போது, மனித வாழ்வு ஒரு கொடையாகப் பார்க்கப்படுவதற்குப் பதிலாக ஒரு பொருளாகக் கருதப்படும் ஆபத்து உள்ளது. திறமையோ சூழ்நிலையோ எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு மனிதரும் மீற முடியாத மாண்பைக் கொண்டிருக்கிறார்.

மூன்றாவதாக, மனிதராக இருப்பது சுதந்திரமாகவும் பொறுப்புடனும் இருப்பதாகும். நன்மையையும் உண்மையையும் நோக்கி வழிநடத்தப்படும் போது சுதந்திரம் தனது அழகை வெளிப்படுத்துகிறது. ஆனால் அது வன்முறையாகவும், தன்னிச்சையான அதிகாரமாகவும், பிறரை ஆதிக்கம் செலுத்தும் விருப்பமாகவும் மாறும்போது அதன் அழகு சிதைக்கப்படுகிறது. மனிதச் செயல்களின் மிகப்பெரிய துயரம் போராகும்; ஏனெனில் அப்போது அறிவியலும் தொழில்நுட்பமும் அழிவுக்கும் கொலைக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

யுனெஸ்கோவின் நிறுவகக் கொள்கை இன்றும் ஆழமான பொருத்தத்தைக் கொண்டுள்ளது: “போர்கள் மனிதர்களின் மனங்களில் தொடங்குவதால், அமைதிக்கான பாதுகாப்புகளும் மனிதர்களின் மனங்களிலேயே கட்டியெழுப்பப்பட வேண்டும்.” ஞானத்திலிருந்து பிரிக்கப்பட்ட அறிவியல் முன்னேற்றம் அழிவுக்கான கருவியாக மாறலாம். கருத்தியலுக்கு உட்படுத்தப்படும் கலாச்சாரம் பொய்யாகவும் பிரச்சாரமாகவும் மாறலாம். உண்மையிலிருந்து விலகும் கல்வி மனச்சாட்சிகளைக் கையாளும் கருவியாக மாறக்கூடும். எனவே, அமைதி என்பது ஒப்பந்தங்களாலோ அல்லது சக்திகளுக்கிடையிலான சமநிலையாலோ மட்டும் கட்டியெழுப்பப்பட முடியாது. அது நீதி, உரையாடல் மற்றும் பிறரைத் தன்னைப் போன்ற சகோதரர், சகோதரியாக ஏற்றுக்கொள்ளும் நேர்மையான மனப்பான்மையிலிருந்து உருவாக வேண்டும்.

இன்று புதிய தொழில்நுட்பங்களும் செயற்கை நுண்ணறிவும் வாய்ப்புகளையும் தீவிரமான சவால்களையும் முன்வைக்கின்றன. தொழில்நுட்பம் மனிதருக்குச் சேவை செய்ய வேண்டும்; அது ஒருபோதும் ஆதிக்கம் அல்லது அநீதிக்கான கருவியாக மாறக்கூடாது. செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் அளவற்ற தகவல்களைச் செயலாக்க முடியும். ஆனால் மனித வாழ்வின் பொருள் தொடர்பான ஆழமான கேள்விகளுக்கு அவை பதிலளிக்க முடியாது. தகவல் என்பது ஞானம் அல்ல; அதுபோல தகவல்தொடர்பு வேகமாக இருப்பதால் மட்டும் அது உண்மையானதாகிவிடாது.

எனவே, உண்மையைத் தேடுவது சமூக நீதியின் ஒரு பகுதியாகும். ஊடக மற்றும் தகவல் அறிவுத்திறனை வளர்ப்பதில் யுனெஸ்கோ மேற்கொள்ளும் முயற்சிகளை நான் வரவேற்கிறேன். குறிப்பாக, குழந்தைகளையும் இளைஞர்களையும் சுரண்டலிலிருந்து பாதுகாத்து, சிந்திக்கவும், பகுத்தறியவும், உண்மையான உறவுகளை உருவாக்கவும் அவர்களின் சுதந்திரத்தை வளர்க்கும் முயற்சிகள் முக்கியமானவை. நமது காலத்திற்கான இரண்டு வலிமையான விவிலியப் படிமங்களை திருவிவிலியம் நமக்கு வழங்குகிறது: பாபேல் கோபுரமும் பெந்தக்கோஸ்தும். பாபேல் கோபுரம் ஆதிக்கத்தின் மூலம் திணிக்கப்படும் ஒற்றுமையைக் குறிக்கிறது; அங்கு வேறுபாடுகள் மோதலுக்கான காரணங்களாக மாறுகின்றன. ஆனால் பெந்தக்கோஸ்து, வேறுபாடுகளை அழிக்காத ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொருவரும் தமது சொந்த மொழியில் செய்தியைக் கேட்டனர்; பல்வேறு குரல்கள் ஒரே நல்லிணக்கத்தில் ஒன்றிணைந்தன. கலாச்சாரங்கள், வரலாறுகள் மற்றும் வேறுபாடுகளை மதிக்கும் இத்தகைய ஒன்றிப்பையே மனிதகுலம் தேட வேண்டும்.

கல்வியும் அறிவியலும் படைப்பைப் பாதுகாப்பதிலும் அக்கறை கொள்ள வேண்டும். ஏனெனில் மனிதரும் சுற்றுச்சூழலும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. மனித மாண்புக்கான நமது அர்ப்பணிப்பின் உண்மையான அளவுகோல், மிகச் சிறியவர்களையும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களையும் நாம் எவ்வாறு நடத்துகிறோம் என்பதிலேயே வெளிப்படுகிறது: குழந்தைகள், ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் போரால் பாதிக்கப்பட்டவர்கள். சுற்றுச்சூழல் நெருக்கடி என்பது மனிதவியல் நெருக்கடியுமாகும்; ஏனெனில் படைப்பைச் சுரண்டுவதும் மனிதர்களைச் சுரண்டுவதும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாதவை.

எனவே, யுனெஸ்கோவின் இறுதி நோக்கம் அமைதியை உருவாக்கும் பணியாகும். அனைத்துலக நிறுவனங்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டாலும் அவை இன்றியமையாதவை. ஏனெனில் பல பிரச்சினைகளை தனிப்பட்ட நாடுகளால் மட்டுமே எதிர்கொள்ள முடியாது. இன்று நமக்கு மிகவும் தேவைப்படும் ஒரு பண்பு உள்ளது; அது பெரிதும் விரும்பப்பட்டாலும் அரிதாகவே காணப்படுகிறது: நம்பிக்கை.

வேறுபாடுகள் அச்சுறுத்தல்களாக இருக்க வேண்டியதில்லை என்ற நம்பிக்கையும், நேர்மையான உரையாடல் தனித்தனியான முயற்சிகளைக் காட்டிலும் மேலான நன்மையை உருவாக்கும் என்ற நம்பிக்கையும் நமக்குத் தேவை.

யுனெஸ்கோவிலும் அனைத்துலக சமூகத்திலும் இந்த நம்பிக்கையை வலுப்படுத்த திருப்பீடம் விரும்புகிறது. கல்வி, ஒருவருக்கொருவர் உள்ள அவநம்பிக்கையைப் போக்க உதவும். அறிவியல் ஒவ்வொரு மனிதருக்கும் சேவை செய்து, எதிர்காலத்திற்கான நம்பிக்கையின் விதைகளை விதைக்க முடியும்.

சமய மரபுகளுக்கும் ஈடுசெய்ய முடியாத முக்கியப் பங்கு உள்ளது. அவை வாழ்வின் தோற்றம் மற்றும் நோக்கம் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன; வாழ்வின் ஆழமான பொருளைத் தேட மக்களுக்கு உதவுகின்றன. அனைவரும் ஒரே தந்தையின் பிள்ளைகள் என்பதை மக்கள் உணரும்போது, கலாச்சார வேறுபாடுகள் பிரிவினைக்கு வழிவகுக்க வேண்டியதில்லை. மாறாக, அவை இருதரப்பு வளமைக்கும் அமைதிக்கும் ஊற்றாக மாற இயலும். நாம் அனைவரும் ஒரே மனிதக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வை இன்றைய சந்திப்பு வலுப்படுத்தட்டும். கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரத்தின் வழியாக யுனெஸ்கோ தொடர்ந்து அமைதியை வளர்க்கட்டும். மேலும், நமது செயல்களை உன்னிப்பாகக் கவனிக்கும் இளைஞர்கள், நீதி, உண்மை, சகோதரத்துவம் மற்றும் நம்பிக்கைக்கான நமது புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பை நம்மில் காணட்டும்.

உங்கள் அனைவர்மீதும், நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள்மீதும், எல்லாம் வல்ல இரக்கமுள்ள படைப்புக் கடவுளின் நிறைவான ஆசீர்வாதங்களைப் பொழிய வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்.