📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 10, 2026 06:33 PM

“காவிரி நீரை பெற பிரதமரின் தலையீட்டை கோராதது ஏன்?”

“காவிரி நீரை பெற பிரதமரின் தலையீட்டை கோராதது ஏன்?”

சென்னை: “மத்தியில் ஆளும் உங்கள் கூட்டணிக் கட்சியான பாஜகவிடமும், பிரதமரிடமும் தமிழகத்தின் உரிமைக்காகத் துணிவோடு குரல் எழுப்பத் தயங்குவது ஏன்? பிரதமரின் தலையீட்டைக் கோரி தண்ணீரைப் பெற்றுத் தர அழுத்தம் கொடுக்காமல், இங்கு வெற்று அரசியல் விமர்சனங்களை முன்வைப்பது உங்களின் இரட்டை நிலையைத் தான் அம்பலப்படுத்துகிறது,” என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் டெல்டா பகுதி விவசாயிகள் தண்ணீரின்றி தவித்து வரும் வேளையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு சேர வேண்டிய காவிரி நீரைப் பெற்றுத் தர வேண்டிய முழுப் பொறுப்பும், அதிகாரமும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கே (CWMA) உள்ளது.

தார்மீகப் பொறுப்பைத் தட்டிக்கழிக்காமல் CWMA உடனடியாகச் செயல்பட்டு தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிட வேண்டும். அண்டை மாநிலமான கர்நாடகாவும் இந்த சட்டப்பூர்வ உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

இந்த காவிரி விவகாரத்தில், இது காங்கிரஸுக்கு எதிராக காங்கிரஸ் என்ற அரசியல் விவாதம் அல்ல. இது தமிழகத்திற்கு எதிராக கர்நாடகம் என்பதாகும். விவசாயிகளின் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், தமிழக காங்கிரஸ் பேரியக்கம் என்றும் தமிழக மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்காகவும், நமது விவசாயிகளின் நலனுக்காகவும் உறுதியுடன் துணை நிற்கும்.

அரசியல் லாபத்திற்காக மற்றவர்களைப் பழிசுமத்தும் அரசியலைத் தூண்டும் பழனிசாமி , உங்களின் இந்த இரட்டை நிலைப்பாடு ஏன்? தமிழகத்திற்கு எதிராகத் தொடர்ந்து பேசி வரும் கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் அசோகா உள்ளிட்ட பாஜகைவினரை மவுனமாக்க உங்கள் கூட்டாளியான பிரதமர் மோடியை நோக்கி ஏன் நீங்கள் ஒரு கேள்வி கூட எழுப்பவில்லை?

மத்தியில் ஆளும் உங்கள் கூட்டணிக் கட்சியான பாஜக விடமும், பிரதமரிடமும் தமிழகத்தின் உரிமைக்காகத் துணிவோடு குரல் எழுப்பத் தயங்குவது ஏன்? பிரதமரின் தலையீட்டைக் கோரி தண்ணீரைப் பெற்றுத் தர அழுத்தம் கொடுக்காமல், இங்கு வெற்று அரசியல் விமர்சனங்களை முன்வைப்பது உங்களின் இரட்டை நிலையைத் தான் அம்பலப்படுத்துகிறது.

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, அண்ணாவின் பெயரையும் தாங்கி, ஜெயலலிதாவால் துணிவோடு வழிநடத்தப்பட்ட ஒரு பேரியக்கத்தின் இன்றைய நிலை என்ன? மக்கள் வழங்கிய அதிகாரத்தைக் கொண்டு மக்களின் உரிமைகளை நிலைநாட்டத் தவறிவிட்டு, மத்தியில் உள்ளவர்களிடம் பணிந்து போய், மோடிக்கு விசுவாசத்தைக் காட்டிக் கொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகளைப் பேச பயந்து நடுங்குவது ஏன்?

உங்களின் இந்த பயமும், அடிமைத் தனமுமே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கட்சியை இன்று கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்து அழித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் உரிமைகளை அடகு வைத்து, கட்சியை அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்லும் உங்களின் இந்த திசைதிருப்பும் அரசியலைத் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று, “காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை கர்நாடக அரசு உடனடியாக விடுவிக்கவில்லையெனில், ‘தமிழக அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர் விடுவிக்கப்படுவார்’ என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியை எச்சரிக்க தவெக அரசின் முதல்வர் தயாரா?” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வினவியிருந்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், “மத்தியில் ஆளும் உங்கள் கூட்டணிக் கட்சியான பாஜக விடமும், பிரதமரிடமும் தமிழகத்தின் உரிமைக்காகத் துணிவோடு குரல் எழுப்பத் தயங்குவது ஏன்?” என்று மாணிக்கம் தாகூர் வினவியுள்ளார்.