📅 Wednesday, 05 August 2026 IST | ஆடி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 05, 2026 02:01 AM

காவிரி நீரை பெற தமிழக அரசு சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்

காவிரி நீரை பெற தமிழக அரசு சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்

காவிரி நீரை பெற தமிழக அரசு சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் - பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Published : August 3, 2026 at 4:38 PM IST

சென்னை: சம்பா சாகுபடியை தடையின்றி தொடங்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மூலம் தமிழ்நாட்டிற்கான உரிய காவிரி நீரை பெற தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை சந்தித்த பிறகு, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ”தமிழகத்தில் எல் நினோ தாக்கத்தால் வறட்சி தீவிரமடைந்துள்ளது. மேட்டூர் அணை, வைகை, முல்லைப்பெரியாறு மற்றும் காவிரி டெல்டா பகுதியின் ஏரி, குளம், ஆறுகள் உள்ளிட்ட பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு போயுள்ளன. இதனால் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், விவசாயத் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில், வரும் சம்பா சாகுபடியாவது சாத்தியமாகுமா என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

காவிரி பிரச்சனையை அரசியல் ரீதியாக அணுகாமல், முழுமையாக சட்டரீதியாக மட்டுமே அணுக வேண்டும் என்பதே தமிழக விவசாயிகளின் நிலைப்பாடு. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, காவிரி நீர் பகிர்வு மற்றும் நிர்வாகம் முழுமையாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. எந்த மாநிலமும் ஆறு அல்லது அணையைத் தங்களுக்குச் சொந்தமானதாகக் கூறி உரிமை கோர முடியாது என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபோதும், கர்நாடக அரசு அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை. தற்போது, பருவமழையால் அணைகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.

தற்போது தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கும் சுமார் 4 டிஎம்சி தண்ணீரைக் கொண்டு சம்பா சாகுபடியைத் தொடங்க முடியாது. ஜூன் மற்றும் ஜூலை மாத நிலுவை டிஎம்சியும் சேர்த்து மொத்தம் 40 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்திற்கு உடனடியாக கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் ” என வலியுறுத்தினார்.

மேலும், இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், நீர்ப்பாசனத் துறைச் செயலாளர் மூலம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவருக்கு அவசரக் கடிதம் அனுப்பி, தமிழகத்திற்கு உரிய 40 டிஎம்சி நீரை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

கர்நாடக அரசின் அனைத்து கட்சிக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பங்கேற்றது குறித்து பேசிய அவர், ”மத்திய அமைச்சர் பங்கேற்றது கண்டனத்திற்குரியது. இதுகுறித்து குடியரசுத் தலைவர் தலையிட்டு, கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

தொடர்ந்து காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் குறித்து பேசிய அவர், ”தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. முதலில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மூலம் சட்டப்படி தமிழகத்திற்கு உரிய நீரைப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்ட வேண்டும். கர்நாடக அரசு தொடர்ந்து ஆணையத்தின் உத்தரவுகளை மதிக்காமல் செயல்பட்டால் மட்டுமே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கலாம்” எனக் கூறினார்.