காவிரி விவகாரத்தில் அரசியல் செய்கிறதா திமுக? தவெகவின் விமர்சனமும், திமுகவின் பதிலடியும்
காவிரி விவகாரத்தில் அரசியல் செய்கிறதா திமுக? தவெகவின் விமர்சனமும், திமுகவின் பதிலடியும்
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டாம் என்று கர்நாடகாவிற்கு அழுத்தம் கொடுத்தவர் கருணாநிதி என்று அமைச்சர் நிர்மல் குமார் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
Published : August 2, 2026 at 7:02 PM IST
சென்னை: காவிரியில் தண்ணீர் திறக்கக் கூடாது என கர்நாடக முதலமைச்சருக்கு திமுக அழுத்தம் கொடுக்கிறது என்று தவெக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியிருப்பது தமிழக அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.
இந்த ஆண்டு ஜுன் 12 -ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாததாலும், நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யாததாலும் காவிரி பாயும் பகுதிகள் நீரின்றி வறண்டு டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்ட விவசாயத்தை கருத்தில் கொண்டு, ஜூலை 28ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி நீர் வீதம், 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடும்படி, கர்நாடாகவுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்தது. ஆனால் தங்கள் மாநிலத்தில் போதிய அளவு மழை பெய்யவில்லை; அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளது எனக் கூறி, கர்நாடகா தண்ணீ்ர திறக்க மறுத்துவிட்டது.
இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த காவிரி மேலாண்மை ஆணையமும், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. ஆனால், ஆணையத்தின் பேச்சையையும் கர்நாடக அரசு செவிக்கொடுத்து கேட்கவில்லை.
நாளுக்கு நாள் இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுக்க, காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க, தவெக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
கர்நாடகா வர வேண்டாம்
இதனிடையே, மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள தமிழக முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
ஆனால், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து கர்நாடகாவில் கன்னட அமைப்புகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து "தற்போது சூழல் சரியில்லை" எனக் கூறி, தமிழக முதலமைச்சர் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என்று அந்த மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சில நாட்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்
இதுகுறித்து முதலமைச்சர் விஜய்யை விமர்சித்திருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டில் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்' என்றார்.
தமிழ்நாடும் கர்நாடகாவும் இந்தியா - பாகிஸ்தான் அல்ல; மேகதாது விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் கருத்து
'தமிழ்நாட்டு முதலமைச்சரை வரக்கூடாது என்று சொல்லிவிட்டு, கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அங்குள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டித் தங்களது அரசியல் ஒற்றுமையை நிரூபித்துள்ளார்' என்றும் அவர் கூறியிருந்தார்.
'கர்நாடகாவைப் போல தமிழ்நாட்டில் எப்போது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டப் போகிறீர்கள்?' என்று கேள்வி எழுப்பியிருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'கடந்த கால அனுபவங்களின்படி, தமிழகத்தின் உரிமைகளைப் பெற சட்டரீதியான போராட்டமே ஒரே வழி' என்றும் அறிவுறுத்தியிருந்தார்.
திமுக தலைமையின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் இன்று கூறியுள்ள கருத்துகள் தான் தமிழக அரசியலில் தற்போது புயலை கிளப்பி உள்ளது.
தமிழக மக்களுக்கு திமுக துரோகம் - நிர்மல் குமார்
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், "கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கும் திமுகவிற்கும் இடையே மிக நெருக்கமான, அரசியல் கடந்த சுமூக உறவு நிலவுகிறது.
காங்கிரஸ் மேலிடம் சொல்வதை விட திமுக சொல்வதைத்தான் டி.கே.சிவக்குமார் கேட்கிறார் என பலரும் சொல்கிறார்கள். அதன் எதிரொலியாக, திமுக என்ன நினைக்கிறதோ, அதைத்தான் கர்நாடகாவில் டி.கே. சிவக்குமார் பேசி வருகிறார்.
காவிரி விவகாரத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் சுமூகத் தீர்வு கண்டு, நல்ல பெயர் பெற்றுவிடக் கூடாது என்ற நோக்கத்தில் திமுக செயல்படுகிறது.
டி.கே. சிவக்குமாருடன் கைகோர்த்துக்கொண்டு, தமிழக அரசின் முயற்சிகளுக்கு திமுக தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு முடக்க நினைக்கிறது" என்று பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
கருணாநிதி மீது விமர்சனம்
மேலும், "மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில், காவிரியில் தண்ணீர் திறந்தால் அவருக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்பதற்காக, தண்ணீர் திறக்க வேண்டாம் என கர்நாடகாவிற்கு அழுத்தம் கொடுத்தவர் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி. அதையே திமுக இப்போதும் செய்து கொண்டிருக்கிறது. அதனால்தான் தமிழக முதலமைச்சர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் அனைத்து சட்டப்பூர்வ தயாரிப்புகளுடன் ஆகஸ்ட் 3ஆம் தேதி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடவிருக்கும் நிலையில், திமுக அவசர அவசரமாகத் தனியாக ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
ஒரே மாநிலத்தைச் சார்ந்து பல மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதால் நீதிமன்றத்தில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு, தமிழகத்தின் உண்மை உரிமை பாதிக்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் காவிரி உரிமைக்காக திமுக எத்தனை மனுக்களைத் தாக்கல் செய்தது?" என்றும் அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
"திமுகவினர் பெங்களூருவில் உள்ள தங்களது குடும்பச் சொத்துகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசிடம் சரணடைந்து தமிழக மக்களுக்குத் துரோகம் செய்கிறார்கள்" என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
அறியாமையில் பேசுகிறார் நிர்மல் குமார்-திமுக
திமுக மீதான அமைச்சர் நிர்மல் குமாரின் இந்த கடுமையான விமர்சனத்திற்கு அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய அவர், "கர்நாடக முதலமைச்சரும், திமுக குடும்பமும் மிகவும் நெருக்கமாக இருக்கிறார் என்று அமைச்சர் நிர்மல் குமார் கற்பனையில் வரலாறு தெரியாமல் பேசுகிறார். சினிமா வசனம் பேசுவது போல் இந்த விவகாரத்தை அணுகக் கூடாது. பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் முக்கியமான பிரச்சினையை இவ்வளவு கேவலமான முறையில் பேசுவது அவரது அறியாமையையே காட்டுகிறது.
திமுக குடும்பம் கூறுவதை டி.கே.சிவக்குமார் கேட்கிறார் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் கூறுவது மூடத்தனமான பேச்சு. தவெகவுக்கு நற்பெயர் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக திமுக காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவதை தடுக்கிறது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். அவர்களுக்கு என்ன நற்பெயர் இருக்கிறது? அதை நாங்கள் தடுக்க வேண்டிய அவசியம் என்ன? முதலமைச்சரே இதுகுறித்து வாய் திறக்கவில்லை" என்று ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், "ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்து, வெள்ளம் வந்தால் காவிரியில் தண்ணீர் தானாகவே திறந்து விடப்படுகிறது. இதுதான் வழக்கமாக நடந்து வருகிறது. நிர்மல் குமாருக்கும் எதுவும் தெரியாது. பத்து கட்சிகளுக்கு மாறிச் சென்றவர். எந்தக் கட்சியில் இருந்தபோது என்ன பேசினோம், என்ன நிலைப்பாடு எடுத்தோம் என்பதுகூட தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்.
கருணாநிதி காலத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள் என்றும் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார். கருணாநிதி காலத்தில்தான் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது என்பது மிகப் பெரிய வரலாறு. அதைப் பற்றி அவருக்கு தெரியவில்லை.
இந்த நேரத்தில் இதைப் பற்றி அரசியல் பேசுவது தவறு. அனைவரும் ஒன்றுபட்டு காவிரி உரிமைக்காக குரல் எழுப்ப வேண்டிய நேரத்தில், தவெக திமுகவை குற்றம்சாட்டி கொண்டிருப்பது மூடத்தனம். அமைச்சர் நிர்மல் குமார் பேசியது தொடர்பாக சட்ட ரீதியாக என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் பரிசீலிப்போம்" என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.