தாராபுரம் அதிமுக வேட்பாளர், நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு
தாராபுரம் அதிமுக வேட்பாளர், நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு
தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் காரை சேதப்படுத்தியதாகவும், அவரை அவதூறாகப் பேசியதாகவும் அதிமுக நிர்வாகிகள் மீது தவெக நிர்வாகி தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published : September 18, 2026 at 7:31 PM IST
திருப்பூர்: தாராபுரம் தொகுதியின் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை அவதூறாகப் பேசியதாக அதிமுக வேட்பாளர் பானுமதி மற்றும் நிர்வாகிகள் மீது காவல் துறையினர் 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.
வரும் அக்டோபர் 6-ம் தேதி தமிழ்நாட்டில் தாராபுரம் (தனி), மதுராந்தகம் (தனி) ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கு நாளை (செப்.19) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை தாராபுரம் (தனி), மதுராந்தகம் (தனி) ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடவுள்ளது.
இதையடுத்து, இரண்டு தொகுதிகளிலும் தவெக, அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சிகள் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்டோர் கட்சிகள் பொதுமக்களை நேரில் சந்தித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, வேட்பு மனுத்தாக்கலின் கடைசி நாளான செப்டம்பர் 16- ஆம் தேதி தாராபுரம் (தனி) தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் சத்தியபாமா, தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகளுடன் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
பின்னர் அலுவலகத்தில் இருந்து தவெக வேட்பாளர் சத்தியபாமா, நிர்வாகிகள் காரில் புறப்பட்டனர். அப்போது அங்கு அதிமுக வேட்பாளர் பானுமதி தனது ஆதரவாளர்கள், கட்சியினருடன் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்திருந்தார். அதைத் தொடர்ந்து, தவெகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் காரைத் தடுத்து நிறுத்தியதாகவும், காரைச் சேதப்படுத்தியதாகவும் அதிமுகவினர் மீது தவெகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதேபோல், தவெக வேட்பாளர் சத்தியபாமாவை அதிமுகவினர் ஆபாசமாகப் பேசியதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த சூழலில், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் 18-வது வார்டை சேர்ந்த தவெக பொருளாளர் காயத்ரி, தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த மனுவில், "வேட்பு மனுவைத் தாக்கல் செய்து திரும்பிய தவெக வேட்பாளரின் காரை அதிமுகவினர் சேதப்படுத்தியதுடன், வேட்பாளர் சத்தியபாமாவை அவதூறாகப் பேசியுள்ளனர்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, அதிமுக வேட்பாளர் பானுமதி, அதிமுக முன்னாள் அமைச்சர்களான பொள்ளாச்சி ஜெயராமன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அதிமுக நிர்வாகிகளான செந்தில்குமார், ராஜேந்திரன், தீபா, கோமதி, ராணி மற்றும் முத்துமணி ஆகிய 9 பேர் மீது தாராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
பெண்ணை அவமதித்தல் மற்றும் பெண் வன்கொடுமை தொடர்பான சட்டப்பிரிவுகள், தனிநபர் சொத்துக்களைச் சேதப்படுத்துதல், இரு தரப்பினரிடையே மோதல் அல்லது கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுப்பிடித்துள்ள நிலையில், சட்டம்- ஒழுங்கு தொடர்பாக காவல்துறையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.