📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Videos news July 26, 2026 07:33 PM

காவல்துறை அதிகாரி கேட்கும் கேள்விக்கு தெளிவாக பதிலளித்த அருணாச்சலம்

காவல்துறை அதிகாரி கேட்கும் கேள்விக்கு தெளிவாக பதிலளித்த அருணாச்சலம்

காவல்துறை அதிகாரி கேட்கும் கேள்விக்கு தெளிவாக பதிலளித்த அருணாச்சலம்- புதிய வீடியோ வெளியானது

அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அருணாச்சலத்திடம் உடல்நிலை எப்படி இருக்கிறது? என்று காவல்துறை அதிகாரி கேட்க, "நன்றாக இருக்கிறேன் சார்" என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

Published : July 26, 2026 at 6:01 PM IST

தூத்துக்குடி: காவல் நிலையத்தில் திடீரென மயங்கி உயிரிழந்த அருணாச்சலம், அரசு மருத்துவமனையில் காவல்துறை அதிகாரி கேட்கும் கேள்விக்கு தெளிவாக பதிலளிக்கும் புதிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், அமுதா நகரைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 24), மூன்றாம் மைல் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையின் மதுபானக் கூடத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த ஜூலை 17- ஆம் தேதி அரசு மதுபானக் கடை மூடி இருக்கும்போது சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக 120 மதுபாட்டில்களுடன் காவல்துறையினர் அருணாச்சலத்தை கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

இந்த நிலையில், அன்று இரவு காவல் நிலையத்தில் இருக்கும்போது அருணாச்சலத்திற்கு திடீரென வலிப்பு வந்து மயங்கி விழுந்துள்ளார். இதைத் தொடர்ந்து காவல்துறையினர், அவரை உடனடியாக அருகே உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்கு தலையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக ஜூலை 21- ஆம் தேதி அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில் ஜூலை 23- ஆம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து, அருணாச்சலத்தின் உறவினர்கள், காவல்துறையினர் தாக்கியதால் தான் அருணாச்சலம் உயிரிழந்தார் என குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்த அருணாச்சலம் குடும்பத்தினர், "அருணாச்சலம் உடல் பரிசோதனை குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு நடைபெற வேண்டும். பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும், சிறப்பு மருத்துவக் குழு மருத்துவர்களால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து, அருணாச்சலத்தின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு ஜூலை 24- ஆம் தேதி உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.

அருணாச்சலம் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த நிலையில் ஜூலை 23-ஆம் தேதி காவல்துறை சார்பில் அருணாச்சலம் காவல் நிலையத்தில், காவல்துறை சோதனைக்கு ஒத்துழைத்த வீடியோவையும், பின்னர் காவல் நிலையத்தில் கைதிகள் வைக்கப்படும் அறையில் மயங்கி விழும் வீடியோவையும் வெளியிட்டிருந்தது.

இந்த சூழலில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அருணாச்சலம் நல்ல நிலையில், காவல்துறையினர் எழுப்பிய கேள்விக்கு உரிய பதிலளிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், காவல்துறை அதிகாரி ஒருவர் உன் பெயர் என்ன? என்ற கேள்விக்கு "அருணாச்சலம்", உடல்நிலை எப்படி இருக்கிறது? "நன்றாக இருக்கிறேன் சார்", எந்த வார்டில் இருக்கிறாய்? "1-வது வார்டில் இருக்கிறேன்", எந்த மருத்துவமனையில் இருக்கிறாய்? "அம்மா இது ஜிஹெச் தானே என்று கேட்க, "உனக்கே தெரியவில்லையா, உளறிக்கொண்டே இருக்கிறாய்" என்று அவரது அம்மா கூறினார். பின்னர் "ஜிஹெச்" என்று அருணாச்சலம் பதில் அளித்தார். "சாப்பிட்டாயா?" என்று அதிகாரி கேட்க "சாப்பிட்டேன்" என்று பதிலளித்தார்.

எனினும், அருணாச்சலத்தைப் பிரேதப் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவராமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.