📅 Saturday, 08 August 2026 IST | ஆடி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 08, 2026 08:33 AM

கைது நாடகத்தின் பின்னணி!

கைது நாடகத்தின் பின்னணி!

கைது நாடகத்தின் பின்னணி! - “ஹீரோ விஜய்... வில்லன் உதய்!”

பெண் வாக்காளர்கள் உதயநிதியின் பேச்சால் முகம் சுளித்துப் போயிருக்கிறார்கள். இப்படியொரு அருவருப்பான வார்த்தைகளைத் தமிழக மக்கள் எதிர்பார்க்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதும், அன்றைய தினமே அவர் விடுவிக்கப்பட்டதும் விவாதப்பொருளாகியிருக்கும் நிலையில், “உதயநிதிக்கு தி.மு.க-வே செய்துதர முடியாத பப்ளிசிட்டியை த.வெ.க அரசாங்கம் செய்து கொடுத்துவிட்டது. தேர்தல் தோல்வி, பதில் சொல்லாத மறுசீராய்வுக்குழு, உட்கட்சிப்பூசலால் முடங்கிக்கிடந்த தி.மு.க தொண்டர்களெல்லாம் உற்சாகமாகி வீதிக்கு வந்துவிட்டார்கள். தூங்கிக்கொண்டிருந்த தி.மு.க-வைத் தட்டி எழுப்பிவிட்டது த.வெ.க...” என்று கொண்டாடுகிறார்கள் தி.மு.க-வினர்.

“தி.மு.க-வுக்கு அடுத்த தலைமை யாரென்பது கேள்வியாகவே இருந்தது. உதயநிதியைக் கைது செய்து, அந்தக் கேள்விக்கு பதில் கொடுத்துவிட்டது த.வெ.க அரசாங்கம். இப்படியொரு கைதைச் செய்து அரசியல்ரீதியாகச் சறுக்கிவிட்டது த.வெ.க” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறிவரும் நிலையில், “நாங்கள் சறுக்கவில்லை. எங்கள் திட்டமே உதயநிதியை புரொமோட் செய்வதுதானே... முதல்வர் விஜய்யை ஹீரோவாகக் காட்டி, உதயநிதியை வில்லனாகக் காட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்தக் கைது நடந்திருக்கிறது” என்று கண்சிமிட்டுகின்றன த.வெ.க-வின் உயர்மட்ட வட்டாரங்கள்.

பரபரப்பாக நடந்தேறியிருக்கும் உதயநிதி கைது நாடகத்தின் பின்னணி என்ன?

நள்ளிரவு முடிவு... பல்டி அரசாங்கம்... தடுமாறிய காவல்துறை!

தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதியைக் கைது செய்யும் முடிவே ஆகஸ்ட் 3-ம் தேதி இரவுதான் எடுக்கப்பட்டிருக்கிறது. நள்ளிரவில் அவசர அவசரமாக தஞ்சாவூர் எஸ்.பி-க்கு விஷயத்தைச் சொல்லி, தஞ்சை கிழக்கு போலீஸாரை சென்னைக்கு வரவழைத்திருக்கிறார்கள். அதிகாலையில்தான் சென்னை போலீஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஏகப்பட்ட குழப்பம் நடந்திருப்பதாகச் சொல்கின்றன காவல்துறை வட்டாரங்கள்.

நம்மிடம் பேசிய ஐ.ஜி அந்தஸ்திலான அதிகாரிகள் சிலர், “வழக்கமாக, இது போன்ற உயர்மட்டக் கைதுகளை அதிகாலை நேரத்தில்தான் மேற்கொள்வது வழக்கம். ஜூன் 2001-ல், மேம்பாலம் கட்டியதில் ஊழல் நடந்ததாகப் பதிவான வழக்கில், மறைந்த முதல்வர் கருணாநிதி கைதுசெய்யப்பட்டார். அதிகாலை 2 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் அவரைக் கைதுசெய்தது காவல்துறை. ஊர் விழிப்பதற்கு முன்பாகவே அவரை ரிமாண்ட் செய்துவிட்டனர். ஆனால், உதயநிதி கைது விஷயத்தில் ஏகத்துக்கும் சொதப்பல் நடந்திருக்கிறது. தஞ்சை போலீஸ் சென்னைக்கு வந்து சேரவே லேட்டானது. அதற்குள் விஷயம் கசிந்து, நீலாங்கரையிலுள்ள உதயநிதியின் வீட்டில் தி.மு.க-வினர் கூடிவிட்டனர்.

காலை 10 மணிக்கு உதயநிதியைக் கைதுசெய்த போலீஸ், அவரோடு தி.மு.க பிரமுகர்களை ஒன்றாக வண்டியில் ஏற்றிக்கொண்டு தஞ்சாவூருக்குப் புறப்பட்டது. சென்னை-திருச்சி நெடுஞ்சாலையிலுள்ள ஒவ்வொரு டோல் பூத்திலும் ஆயிரக்கணக்கான தி.மு.க-வினர் உதயநிதி சென்ற போலீஸ் வாகனத்தை மறித்தனர். தமிழகமெங்கும் போராட்டம் வெடித்தது. நிலைமை கைமீறிச் சென்றுவிட்டதை உணர்ந்த அரசு, உதயநிதியின் முன்ஜாமீன் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, ‘அவரைக் கைதுசெய்யும் நோக்கமில்லை. விசாரித்துவிட்டு அனுப்பி விடுகிறோம்’ என்று பல்டியடித்துவிட்டது. அதை நாங்களே எதிர்பார்க்கவில்லை.

கும்பகோணம் வழியாகவும், அரியலூர் வழியாகவும் உதயநிதியை தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்ல முடியாமல் தவித்துவிட்டது காவல்துறை. தஞ்சாவூர் டவுனுக்குள் சுமார் 20,000 தி.மு.க-வினர் திரண்டிருக்கும் தகவல் கிடைக்கவே, வேறு வழியில்லாமல் தஞ்சைக்கு அருகிலுள்ள செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து உதயநிதியை விசாரித்துவிட்டு அனுப்பினோம். உதயநிதியை ரிமாண்ட் செய்ய முடிவெடுத்திருந்தால், அதை அதிகாலை நேரத்தில் செய்திருக்க வேண்டும். அதற்குத் தகுதியான அதிகாரிகளிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்க வேண்டும். முதல்வர் உத்தரவிட்டும், வழக்கு பதியப்பட்ட ஸ்டேஷனுக்குள் ஒருவரைத் தமிழக காவல்துறையால் அழைத்துச் செல்ல முடியவில்லை என்பது முதல்வருக்குத்தான் அவமானம்” என்றனர்.

வலுப்பெறும் ‘செயல்தலைவர்’ கோஷம்!

உதயநிதி கைதுசெய்யப்பட்டு ஊர்வலம்போல தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்பட்டவிதமும், போலீஸ் விசாரணை முடிந்து கிளம்பியபோது தி.மு.க-வினர் வாண வேடிக்கை வெடித்துக் கொண்டாடியதும், சென்னை விமான நிலையத்தில் சுமார் 10,000 பேர் கூடி அவரை வரவேற்றதும், உதயநிதிக்குப் பெரிய அளவில் ‘பூஸ்ட்’ கொடுத்திருக்கின்றன. செனடாப் சாலைக்கு வந்த உதயநிதியை ஆரத்தழுவி வரவேற்றார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். உதயநிதியோடு வந்தவர்கள் கிளம்பிச் சென்றதும் குடும்பத்துக்குள் பெரும் விவாதமே நடந்திருக்கிறது.

நம்மிடம் பேசிய தி.மு.க-வின் சீனியர்கள் சிலர், “இந்தக் கைதால், சோர்ந்திருந்த தி.மு.க தொண்டர்களெல்லாம் உற்சாகமடைந்துவிட்டனர். உதயநிதியின் பார்வையில் பட்டுவிட வேண்டும், அவருக்காகக் கைதானதாக ஆவணத்தில் பதிந்துவிட வேண்டும் என்று சுமார் ஒரு லட்சம் தொண்டர்களும் நிர்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு உதயநிதி தயாராகிவிட்டார்’ என்பதைத்தான் இந்தக் கைது உணர்த்தியது.

அதுவரை, ‘தம்பியையெல்லாம் தலைவரா ஏத்துக்க முடியாதுங்க... அவருக்கு அனுபவம் பத்தாது...’ என்று சொல்லிவந்த சீனியர்களே, அடித்துப் பிடித்துக்கொண்டு உதயநிதி அழைத்துச் செல்லப்பட்ட போலீஸ் வாகனத்தைத் துரத்தவேண்டியதானது. பசியும் பட்டினியுமாக உதயநிதியைப் பின்தொடர்ந்தவர்களும், ‘என் தலைவனுக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுக்கலையா... டீ வாங்கிக் கொடுக்கலையா?’ என்று கேட்டவர்களும், ஒருகாலத்தில் உதயநிதியை எதிர்த்தவர்கள்தான். அவர்கள் அனைவரையும் ஓரணியில் உதயநிதிக்கு ஆதரவாகத் திரட்டிவிட்டது இந்தக் கைது.

தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்காவும் உற்சாகமாகிவிட்டார். ‘விஜய்யை எதிர்க்குறதுக்கு உதயநிதிதான் சரியான ஆளுன்னு ஊரே பேச ஆரம்பிச்சிருச்சு. இனியும் யோசிக்காம, உதயநிதிக்கு செயல்தலைவர் பதவியைக் கொடுத்துடுங்க...’ என்று பேசத் தொடங்கிவிட்டார் துர்கா. கட்சிக்குள்ளும் ‘செயல்தலைவர்’ கோஷம் ஓங்கத் தொடங்கிவிட்டது. விரைவிலேயே பல மாற்றங்களை தி.மு.க-வில் எதிர்பார்க்கலாம்” என்றனர் விரிவாக.

‘`ஹீரோ விஜய்... வில்லன் உதய்...’’ - கைது நாடகத்தின் பின்னணி!

இந்தக் கைது எந்த அளவுக்கு உதயநிதிக்கு கைகொடுத்திருக்கிறதோ, அதே அளவுக்கு த.வெ.க-வுக்கும் கைகொடுத்திருப்பதாகச் சொல்கின்றன அந்தக் கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள்.

அது குறித்து நம்மிடம் பேசிய த.வெ.க-வின் மிக மூத்த புள்ளிகள் சிலர், “பெண்களை அவதூறு செய்தால் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்பதை வெளிக்காட்டவே, உதயநிதியைக் கைதுசெய்யச் சொன்னார் முதல்வர் விஜய். அதைச் செயல்படுத்தியவிதத்தில் சறுக்கிவிட்டோம். ஆனால், அரசியல்ரீதியாக மூன்று வகைகளில் லாபமும் அடைந்துவிட்டோம்.

அதாவது, தி.மு.க தலைவரான ஸ்டாலின் தேர்தலில் தோற்றுவிட்டாலும், அவரது அரசியல் இமேஜ் இன்னும் மங்கவில்லை. அதனால்தான், த.வெ.க கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட்டுகளும் வி.சி.க-வினருமே ஸ்டாலினை இன்றளவும் பாராட்டுகிறார்கள். அரசியலிலிருந்து அவரை ஒதுக்கினால்தான், முதல்வர் விஜய்யின் இமேஜ் மேலும் வளரும். உதயநிதியைக் கைதுசெய்தால், அதைவைத்து அவரது இமேஜ் கட்சிக்குள் உயரும். தி.மு.க-வுக்குள் தலைவர் பொறுப்புக்குத் தானாகக் கொண்டுவரப்படுவார். ஸ்டாலினும் ரிட்டையர்டு ஆகிவிடுவார். எதிர்கால அரசியலை `விஜய் Vs உதய்’ என்று கட்டமைத்துவிடலாம்.

இரண்டாவது, உதயநிதியைவிட கனிமொழிக்கு அரசியல் தொடர்புகளும் அரசியல் முதிர்ச்சியும் அதிகம். ஒருவேளை, அவர் தி.மு.க தலைமை பொறுப்புக்கு வந்துவிட்டால், அவரை எதிர்த்து முதல்வர் விஜய்யால் அரசியல் செய்ய முடியாது. ஒரு பெண் தலைவர் என்பதால், த.வெ.க-வுக்கு விழுந்த பெண்களின் வாக்குகள், கனிமொழி பக்கம் கணிசமாகச் சாயவும் வாய்ப்பிருக்கிறது. அதைத் தடுக்க, உதயநிதியை ஒரு தலைவராக்க வேண்டும். அதற்கு, அவரைக் கைதுசெய்து பிரபலப்படுத்த வேண்டும்.

முதல்வர் விஜய்யை ஹீரோவாகவும், உதயநிதியை வில்லனாகவும் காட்டும் வியூகத்திலேயே, இந்தக் கைது நாடகம் நடந்தேறியிருப்பதாகச் சொல்கின்றன த.வெ.க மேல்மட்ட வட்டாரங்கள். அந்த வியூகம் பலித்ததோ இல்லையோ... தி.மு.க பிரமுகர்களுடன் தொடர்பிலிருந்த த.வெ.க எம்.எல்.ஏ-க்களெல்லாம் அரண்டுபோய்விட்டார்கள். “உதயநிதியையே தூக்கிட்டாங்க. நாம எம்மாத்திரம்...” என்று தி.மு.க தொடர்பு எண்களை பிளாக் செய்தவர்கள் ஏராளம். ஒரே ஒரு கைதுதான்.... ஓராயிரம் அரசியலைப் பேசவைத்துவிட்டது!