பெரியகுளம் தாலுகாவில் நூற்றுக்கணக்கான முதியவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை திடீர் நிறுத்தம்
பெரியகுளம் தாலுகாவில் நூற்றுக்கணக்கான முதியவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை திடீர் நிறுத்தம்
தேனி : பெரியகுளம் தாலுகாவில் நூற்றுக்கணக்கான முதியவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர உதவித் தொகை திடீரென நிறுத்தப்பட்டதால் ஏராளமான முதியவர்கள் தாலுகா அலுவலகத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் காத்துக் கிடந்தனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவில், ஆயிரக்கணக்கான முதியோர் தமிழக அரசின் முதியோர் உதவித்தொகையை கடந்த பல ஆண்டு காலமாக பெற்று வருகின்றனர். இத்தகைய உதவித்தொகையானது முதியவர்களுக்கான மருத்துவம் மற்றும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஆறுதலாக இருந்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் முதியோர் உதவித்தொகை அதிகரித்து வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவரான முதல்வர் சி.ஜோசப் விஜய் தேர்தல் அறிக்கை போது தெரிவித்தார்.
ஆனால் ஆனால் இதுவரை முதல்வர் ஜோசப் விஜய் முதியோர்களுக்கு மட்டுமல்லாமல் மகளிர் உரிமைத்தொகை மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்ட சமூக நல உதவி தொகைகளை உயர்த்தி வழங்குவதற்கான எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை. இதனால் உதவித்தொகை அதிகரிக்கும் என்ற ஆசியோடு இருந்தவர்கள் பெருத்த ஏமாற்றத்தோடு இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையானது ஆயிரக்கணக்கான முதியவர்களுக்கு திடீரென நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும் ஏராளமான முதியவர்களுக்கான உதவித்தொகை இம்மாதம் முதியவர்களின் வங்கிக் கணக்கிற்கு வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான முதியவர்கள், நேற்று பெரியகுளம் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர்.
சுட்டெரிக்கும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், உடல்நலக் குறைபாடுடைய முதியவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால், முதியவர்களுக்கு உதவிகளைச் செய்து தர வேண்டிய அரசுத்துறை நிர்வாகத்தினர் அலுவலக கதவுகளை மூடினர்.
இதனால் உதவித்தொகை கேட்டு வந்த புதியவர்கள் அலுவலக வாயிலில் கடும் வெயிலில் காத்திருந்தனர்.அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கால் முதியவர்கள் வெயிலில் வாடித் தவிப்பது குறித்து தென்கரை போலீசார் தகவல் அறிந்து தாலுகா அலுவலகத்திற்கு விரைந்து வந்து முதியவர்களை வரிசைப்படுத்தினர்.
இது குறித்து முதியவர்கள் கூறுகையில், ‘‘நாங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த உதவித்தொகையைப் பெற்று வருகிறோம். எந்தக் காரணமும் சொல்லாமல் திடீரென நிறுத்திவிட்டார்கள். நடக்கக் கூட முடியாமல், கைதுணையாக ஆட்களை கூட்டிக்கொண்டு பேருந்தில் ஏற சிரமப்பட்டு இங்கு வந்திருக்கிறோம். இந்த உதவித்தொகையை நம்பிதான் எங்கள் உயிரே ஓடிக்கொண்டிருக்கிறது’’ எனக் கூறினர்.