கொளத்தூர் தொகுதியில் வாக்குப்பதிவில் முறைகேடு நடக்கவில்லை
கொளத்தூர் தொகுதியில் வாக்குப்பதிவில் முறைகேடு நடக்கவில்லை - மாவட்ட தேர்தல் அலுவலர் அறிக்கை
மாதிரி வாக்குப்பதிவின் முடிவுகள் மற்றும் விவிபேட் சீட்டுகள் சரிபார்க்கப்பட்டதில், எந்தவித முரண்பாடும் இல்லாமல் அனைத்தும் சரியாக இருந்தது உறுதி செய்யப்பட்டது என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சமீரன் தெரிவித்துள்ளார்.
Published : August 5, 2026 at 10:40 PM IST
சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் வாக்குப் பதிவில் முறைகேடு நடக்கவில்லை என்று அந்த மாவட்ட தேர்தல் அலுவலரும் சென்னை மாநகர ஆணையருமான சமீரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தார்.
இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனவும், மீண்டும் சோதனை செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி, கொளத்தூரில் 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்களை ஆய்வு செய்யும் பணி ஜூலை 29-ஆம் தேதி தொடங்கின. சென்னை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநாராட்சி ஆணையருமான சமீரன் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வுப் பணிகள் இன்று நிறைவடைந்தன.
முன்னதாக, வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதில் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாகவும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள குறியீடுகளால் முறைகேடு நடைபெற்றதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் திமுக சந்தேகம் எழுப்பி இருந்தது.
இந்நிலையில், சென்னை சிந்தாதிரிபேட்டையில் உள்ள மையத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணியை திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நேரில் பார்வையிட்டார்.
தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம்- திமுக
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "இந்த ஆய்வின்போது, 2 வாக்குப்பதிவு இயந்திரங்களின் விவிபேட் இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை என்பதை தெரிவித்திருந்தோம். வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள அட்ரஸ் டேக் புதியதாக இருந்தது என்பதையும் தெரிவித்தோம். இது குறித்து முறையான புகார்களை மாவட்ட தேர்தல் அலுவலரிடமும் , தேர்தல் ஆணையத்திடமும் அளித்துள்ளோம்.
மற்றொரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் இருந்தும், அங்கீகரிக்கப்படவில்லை.அந்த இயந்திரம் பழுது என பொறியாளர் ஒப்புக் கொண்டார். அதற்கான விளக்கத்தை தேர்தல் ஆணையம் கொடுப்பார்கள்.
ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட 14 வாக்குப்பதிவு இயந்திரங்களில், 5 வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீது சந்தேகமாக உள்ளது. எனவே 30 சதவீதம் வாக்கு எந்திரம் சந்தேகத்திற்கு இடமாக உள்ளது. இது குறித்து நிச்சயமாக வழக்கு தொடருவோம். இது, இந்தியாவில் முதல் வழக்காக இருக்கும்" என தெரிவித்தார்.
தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மறுப்பு
ஆனால், அந்த குற்றச்சாட்டுகளுக்கு கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "கொளத்தூர் தொகுதியில் 14 வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், எந்த தவறும் நடக்கவில்லை என தீர்ப்பு கொடுத்து விட்டது. திமுகவின் குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படவில்லை. திமுகவினர் போட்ட தேர்தல் வழக்கை மக்களும், தொண்டர்களும் பார்த்துக்கொண்டுள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் எந்த குறைபாடும் இல்லை" என்று தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் விளக்கம்
இதுகுறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநாராட்சி ஆணையருமான சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி தேர்வு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஆய்வு, சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. மாதிரி வாக்குப்பதிவின் முடிவுகள் மற்றும் விவிபேட் சீட்டுகள் சரிபார்க்கப்பட்டதில், எந்தவித முரண்பாடும் இல்லாமல் அனைத்தும் சரியாக இருந்தது உறுதி செய்யப்பட்டது.
சரிபார்ப்பு பணியின் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் முழுமையாக விளக்கிக் காண்பிக்கப்பட்டன. விண்ணப்பதாரர் வேட்பாளரின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பிற போட்டியிட்ட வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் எழுப்பிய அனைத்து சந்தேகங்களுக்கும் உரிய விளக்கங்கள் உடனுக்குடன் அளிக்கப்பட்டன.
ஆய்வு மற்றும் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள சரிபார்ப்பு நடைமுறைகளின்படி முறையாக செயல்படுகின்றன என்று பெல் நிறுவன பொறியாளர்களால் சான்றளிக்கப்பட்டுள்ளது. அச்சான்றிதழின் நகல் விண்ணப்பதாரர் வேட்பாளருக்கு வழங்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.