📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 27, 2026 09:02 PM

கே.வெங்கட நாராயணா நியமனம்: காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி அதிருப்தி?

கே.வெங்கட நாராயணா நியமனம்: காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி அதிருப்தி?

கரூர்: “தமிழகத்தின் பிரதிநிதியாக தமிழகத்தைச் சேர்ந்தவர் இருந்தால் சிறப்பாக இருக்கும்” என கரூர் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “கரூர் வேளாண் கல்லூரிக்காக ரூ.73 கோடி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க 5 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு ஒப்புதல் பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுற்றுவட்டச் சாலையின் முதல் கட்டத்துக்கு மட்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 கட்டங்களுக்கு நிதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விமான நிலையத் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சியில் ஏற்பட்ட தாமதத்துக்குப் பிறகு, தற்போது திட்டத்தை முன்னெடுக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஊழலுக்கு எந்த வகையிலும் சமரசம் இருக்கக் கூடாது. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளில் ஆளுநர் அனுமதி வழங்காதது நிர்பந்தங்களால் இருக்கலாம். அமலாக்கத் துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் பணியில் பாஜக ஈடுபட்டு வருகிறது.

தமிழக அரசு நியமனங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தமிழக பிரதிநிதிக்கு சென்சிடிவ்வான வேலைகள் உள்ளன. தமிழகத்தின் பிரதிநிதியாக இருக்கக் கூடிய ஒருவர், தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தால் சிறப்பாக இருக்கும் என நான் நினைக்கிறேன். கர்நாடகத்துக்கும், நமக்கும் மேகேதாட்டு போன்ற பிரச்சினை உள்ள சூழலில், கர்நாடகாவைச் சேர்ந்தவரை தமிழக பிரதிநிதியாக நியமிப்பது சிக்கலான விஷயம்.

கர்நாடகாவை சேர்ந்தவராக இருப்பதாலே, அவர் கர்நாடகாவை ஆதரித்துவிடுவார் என கூறி விடமுடியாது. காவிரி தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தமிழக நலனில் காங்கிரஸ் எப்போதும் சமரசம் செய்து கொள்ளாது. காவிரி உரிமை சட்ட போராட்டம் தொடரும்” என்றார்.

முன்னதாக, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக, ‘ஜனநாயகன்’ பட தயாரிப்பாளர் கே.வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்துக்கு பல்வேறு கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது கவனிக்கத்தக்கது.