📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 06, 2026 05:33 AM

கேரளாவில் தொடரும் கனமழைக்கு 27 பேர் பலி; மலையோர பாதைகளில் கட்டுப்பாடு

கேரளாவில் தொடரும் கனமழைக்கு 27 பேர் பலி; மலையோர பாதைகளில் கட்டுப்பாடு

திருவனந்தபுரம்: கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு 27 பேர் பலியாகி உள்ளனர். மலையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் வலுவடைந்து கனமழை பெய்து வருகிறது. நேற்றும் மழை தொடர்ந்தது. ஆலப்புழா, கோட்டயம் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டிருந்தது. திருச்சூர், இடுக்கி. வயநாடு, எர்ணாகுளம், ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பள்ளி , கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

கடந்த நான்கு நாட்களில் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. நான்கு பேரை காணவில்லை. 418 முகாம்களில் 18,434 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோட்டயம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, கண்ணுார் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களிலும் இன்றும் மழை தொடர்ந்தது.

நிலச்சரிவு அபாயம் உள்ள வயநாடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருவதால் இங்கு உஷார் நிலை பிரகடனப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இரவு நேரங்களில் மலையோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கலெக்டர் மேகஸ்ரீ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோழிக்கோடு - வயநாடு , கண்ணுார்- வயநாடு இடையே உள்ள மலைப்பாதைகளில் இரவு நேர பயணத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.