📅 Saturday, 01 August 2026 IST | ஆடி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 01, 2026 03:30 PM

கேரளாவில் வெள்ளம், நிலச்சரிவு: மூவர் மரணம்

கேரளாவில் வெள்ளம், நிலச்சரிவு: மூவர் மரணம்

கொச்சி: கேரள மாநிலத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) வெவ்வேறு இடங்களில் நேர்ந்த மூன்று நிலச்சரிவுகளில் மூவர் மாண்டனர்.

அங்குப் பருவமழை தொடர்ந்து கடுமையாகப் பெய்துவருகிறது.

இடுக்கியில் உள்ள அடூர்மலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு வீடு தரைமட்டமானதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அருகிலுள்ள வாகமன் சுற்றுலாத்தலத்தில் இடிபாடுகளில் மக்கள் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அங்கு மீட்புக் குழுவினர் தேடுதல் பணிகளைத் தொடர்கின்றனர். சாலைகளிலும் வீடுகளிலும் வெள்ளநீர் புகுந்துள்ளதால் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ரான்னி வட்டாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு எச்சரிக்கை

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிகாரிகள் சிறிய அணைகள் பலவற்றின் மதகுகளைத் திறந்துவிட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நிலச்சரிவு, வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குத் தகுந்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

வெள்ள நிலவரம்

இடுக்கி, கோட்டயம் மாவட்டங்கள் முழுதும் பெய்த கனமழையால் பரவலாக வெள்ளம் ஏற்பட்டது. பல இடங்களில் சாலைகளும் துண்டிக்கப்பட்டன. கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை உட்பட பல்வேறு வழித்தடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேவேளையில், ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் ஈராட்டுப்பேட்டை, கூட்டிக்கல் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் பாலங்களும் வீடுகளும் நீரில் மூழ்கின. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கித்தவித்த குடியிருப்பாளர்களை மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர்.