📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 03, 2026 09:33 AM

கேரளத்தில் கனமழை எதிரொலி

கேரளத்தில் கனமழை எதிரொலி

கேரளத்தில் கனமழை எதிரொலி - சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Published : August 2, 2026 at 9:05 PM IST

சென்னை: சபரிமலைக்கு செல்ல திட்டமிட்டுள்ள தமிழக பக்தர்கள் தங்களது பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

கேரளம் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள பல்வேறு மலைப்பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அபாயம் நிலவுகிறது.

குறிப்பாக பம்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பம்பை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன், சபரிமலை செல்லும் மலைப்பாதைகளிலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இதையடுத்து கேரளத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இச்சூழலில், ஆகஸ்ட் 3-ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிரபுத்தரி விழா நடைபெறுகிறது. இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் சபரிமலையில் மிகவும் கோலாகலமாக நடைபெறும். இந்நிலையில், வருகிற ஆகஸ்ட் 3-ஆம் தேதி (நாளை) அதிகாலை 5.40 மணி முதல் 6.30 மணி வரை இந்த விழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘விவசாய செழிப்புக்கும், நல்ல அறுவடைக்கும் நன்றி செலுத்தும் வகையில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை ஐயப்பனுக்கு சமர்ப்பித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பூஜைகள் முடிந்ததும் பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும்.

இந்த விழாவை முன்னிட்டு, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு பக்தர்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதில், 'ஆகஸ்ட் 2, 3 ஆகிய தேதிகளில் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அத்தியாவசியமற்ற பயணங்களை மறுபரிசீலனை செய்யுமாறும், வானிலை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து, அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்' என்றும் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு சார்பிலும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 02) வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக பம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் தங்களது பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், சபரிமலைக்கு ஏற்கனவே செல்வதற்காக திட்டமிட்டுள்ள பக்தர்கள் தற்போதைய வானிலை நிலவரத்தை கருத்தில் கொண்டு தங்களது பயணத்தை ஒத்திவைக்கவோ அல்லது மறுசீரமைப்பு செய்யவோ வேண்டும்' என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.