📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 27, 2026 12:03 AM

கேரளத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்; தோவாளையில் களைகட்டிய பூ வியாபாரம்!

கேரளத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்;
தோவாளையில் களைகட்டிய பூ வியாபாரம்!

கேரளத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்; தோவாளையில் களைகட்டிய பூ வியாபாரம்!

தோவாளை முன்பு நந்தவனமாக இருந்தது. திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் இருந்தே தோவாளையில் இருந்துதான் பூக்கள் கேரளத்துக்குச் செல்கின்றன.

மலையாள தேசத்தை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தி நாட்டு மக்களை மகிழ்ச்சியாக வைத்திருந்தார். இந்திரலோகமே வியக்கும் வகையில் ஆட்சிபுரிந்தார் மகாபலி சக்கரவர்த்தி. இல்லை என்று கேட்கும் அனைவருக்கும் வாரி வழங்கி வள்ளலாக திகழ்ந்தார். மூன்று லோகத்திலும் மகாபலி சக்கரவர்த்தியின் ஆட்சியின் புகழ் பரவியது. மகாபலியின் புகழை பொறுக்கமுடியாத தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று தங்கள் புகழை விட மகாபலி சக்கரவர்த்தியின் புகழ் உயர்ந்து வருவதாக புகார் சொன்னார்கள். மகாபலி சக்கரவர்த்தியின் புகழை சரித்திரத்தில் நிலைநிறுத்த முடிவு செய்த மகாவிஷ்ணு வாமன (குள்ளனாக) அவதாரம் எடுத்து மகாபலி சக்கரவர்த்தியிடம் சென்று மூன்றடி நிலம் கேட்டார். குரு சுக்ராச்சாரியர் வந்திருப்பது மகாவிஷ்ணு எனக் கூறியும் மூன்றடி நிலம் கொடுக்க சம்மதித்தார் மகாபலி சக்கரவர்த்தி. உடனே குள்ள உருவில் இருந்த வாமனன் உயரமாக வளர்ந்து தனது ஈரடியில் உலகம் முழுவதையும் அளந்தவர் மூன்றாவது அடி வைக்க இடம் கேட்டார். அதற்கு தனது தலையை காட்டினார் மகாபலி. மகாபலியின் தலையில் காலை வைத்து பாதாள உலகத்துக்கு அனுப்பினார் மகாவிஷ்ணு. அப்போது ஆண்டுக்கு ஒருமுறை தன் நாட்டு மக்களை சந்திக்க வந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என மகாபலி கேட்டார். மகாவிஷ்ணுவும் வரம் கொடுத்தார். மகாபலி சக்கரவர்த்தி நாட்டு மக்களை சந்திக்கவரும்போது மன்னரை வரவேற்கும் விதமாக பூக்களால் அத்தப்பூ கோலம் போட்டும், வீடுகளை அலங்கரித்தும், புத்தாடை அணிந்து, பல்வகை கூட்டு, பொரியல் பாயசம் வைத்து சாப்பிடுவார்கள். உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்து குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிடுவதை 'ஓண சத்ய' என கேரள மக்கள் குறிப்பிடுகிறார்கள்.

தமிழகத்தில் அறுவடைத் திருவிழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடுவது போன்று கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. திருமணமான மணமக்களுக்கு முதல் ஓணப்பண்டிகை அன்று தலையோணம் என்ற பெயரில் விருந்து வைப்பது வழக்கம். கொள்ளு தானியத்தை விற்பனை செய்தாவது ஓணம் கொண்டாட வேண்டும் என்பதை "காணம் விற்று ஓணம் கொள்ளணும்" என மலையாளத்தில் சொலவடை உண்டு. ஓணப்பண்டிகை பத்து நாட்கள் கொண்டாடுவது வழக்கம். அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என பத்து நாட்கள் ஓணப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. மக்களின் பாரம்பர்ய, கலாச்சார திருவிழா என்றால் ஓணம் பண்டிகைதான். ஓணப்பண்டிகையில் முக்கிய இடம் பிடிப்பது அத்தப்பூ கோலம். பலவண்ண மலர்களால் வீட்டு முற்றத்திலும், பொது இடங்களிலும் கோலமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். கேரள மாநிலம் முழுவதும் தேவையான மலர்கள் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் இருந்து செல்கிறது. கேரள வியாபாரிகளும், பொதுமக்களும் நேற்று இரவு முதலே தோவாளைக்கு வந்து மலர்களை வாங்கிச் செல்கின்றனர். இன்று நள்ளிரவு வரை தோவாளையில் மலர் சந்தை நடைபெறுகிறது.