📅 Friday, 31 July 2026 IST | ஆடி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 30, 2026 03:33 AM

கேரளத்தில் த.வெ.க முகம் நாங்கதான்... மோதும் தலைகளால் பெரும் குழப்பம்!

கேரளத்தில் த.வெ.க முகம் நாங்கதான்... மோதும் தலைகளால் பெரும் குழப்பம்!

கேரளத்தில் த.வெ.க முகம் நாங்கதான்... மோதும் தலைகளால் பெரும் குழப்பம்!

“வயநாட்டில் தியேட்டருக்குச் சென்றபோது அவர்கள் வந்து என்னிடம் அறிமுகமானார்கள். கே.வி.கே செயல்பாடுகள் குறித்துத் தெரிவித்த போது, ‘தலைமையின் அனுமதி பெற்று செயல்படுங்கள்’ என்று கூறினேன்

‘விஜய் பெயர், த.வெ.க கொடி., உறுப்பினர் சேர்க்கை முகாம்கள், பொதுக்கூட்டங்கள்... என, கேரளத்தில் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. ஒருபுறம், சதீஷ் தோந்நக்கல் தலைமையில் த.வெ.க-வை கேரளத்தில் ஒருங்கிணைப்பதாகக் கூறி ஒரு குழு செயல்படுகிறது. மறுபுறம், நவ ஜனசக்தி காங்கிரஸ் (என்.ஜெ.சி) என்ற கட்சி, ‘கேரள வெற்றிக் கழகம்’ (கே.வி.கே) என்ற பெயரில் விஜய் ரசிகர்களை உறுப்பினர்களாக இணைத்துவருகிறது. இரு தரப்பினரும் விஜய் பெயரையும், த.வெ.க அடையாளங்களையும் பயன்படுத்துவதால் விஜய்யின் அதிகாரபூர்வ பிரதிநிதி யார் என்ற கேள்வி அவருடைய ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

அ.தி.மு.க-வில் கேரள மாநில நிர்வாகியாக இருந்தவர், சதீஷ் தோந்நக்கல். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சரத் பவாரின் என்.சி.பி கட்சியில் இணைந்தார். இப்போது அதிலிருந்து விலகி, த.வெ.க பேனரில் செயல்பட்டுவருகிறார். தி.மு.க இடுக்கி மாவட்டச் செயலாளர் ஜனார்த்தனன், அ.தி.மு.க கேரள மாநில சிறுபான்மை அணிச் செயலாளர் பஷீர், சினிமா நடிகை பிரியங்கா, தொலைக்காட்சி நடிகை ஜீஜா சுரேந்திரன் எனப் பலரையும் கட்சியில் இணைத்திருக்கிறார்.

போதைப்பொருளுக்கு எதிராக, கேரள அரசு முன்னெடுத்துவரும் ‘ஆபரேஷன் தூஃபான்’ திட்டத்தின் ஒரு பகுதியாக கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா சமீபத்தில் தமிழக முதல்வர் விஜய்யைச் சந்தித்தார். அதையடுத்து, ‘கேரளத்தின் 14 மாவட்டங்களிலும் ஆபரேஷன் தூஃபானுக்கு ஆதரவாக த.வெ.க சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெறும்’ என சதீஷ் தோந்நக்கல் அறிவித்திருக்கிறார். அவரது போஸ்டர்களில் விஜய், புஸ்ஸி ஆனந்த் படங்களுடன் த.வெ.க கொடியும் இடம்பெற்றிருக்கிறது.

சதீஷ் தோந்நக்கல்லிடம் பேசினோம். “தமிழக முதல்வர் விஜய், த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரைச் சந்தித்து, கேரளத்தில் த.வெ.க-வை ஒருங்கிணைக்கும் பணியைச் செய்து வருகிறேன். கொச்சியில் நடைபெறவிருக்கும் ஆபரேஷன் தூஃபான் நிகழ்ச்சியில் நடிகர் மோகன் லாலுடன் முதல்வர் விஜய்யும் கலந்துகொள்கிறார். அந்த நிகழ்ச்சியின் முன்னோட்டமாக ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 14 மாவட்டங்களிலும் த.வெ.க சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெறும். கேரள அமைச்சர்களே அவற்றைத் தொடங்கிவைக்கவிருக்கின்றனர். த.வெ.க-வுக்காக, பல்வேறு முக்கியப் பிரமுகர்களையும் இணைத்துச் செயல்பட்டுவருகிறேன்” என்றார்.

இன்னொரு புறம், ‘என்.ஜே.சி - கே.வி.கே கூட்டணி’ என்ற பெயரில் எர்ணாகுளம், கோட்டயம், கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விஜய் புகைப்படத்துடன் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. எர்ணாகுளத்தில் விஜய் ரசிகர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்திய ஷபீர் சக்கரபறம்பிடம் பேசினோம். “நவ ஜனசக்தி காங்கிரஸ் (என்.ஜே.சி) கட்சியின் கேரள மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். கேரளத்திலுள்ள விஜய் ரசிகர்களை என்.ஜே.சி-யுடன் ஒருங்கிணைக்கும் நோக்கில்தான் ‘கேரள வெற்றி கழகம்’ உருவாக்கப்பட்டிருக்கிறது. எங்கள் தேசியத் தலைவர் மனோஜ் சங்கரநெல்லூர் இதை முன்னெடுத்து வருகிறார்” என்றார்.

மனோஜ் சங்கரநெல்லூரை தொடர்புகொண்டு பேசினோம். “நவ ஜனசக்தி காங்கிரஸ், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற தேசியக் கட்சி. 12 மாநிலங்களில் செயல்பட்டுவருகிறோம். தமிழ்நாட்டில் முன்பு அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்தோம். எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்த பிறகு நாங்கள் அங்கிருந்து விலகினோம். கடந்த சட்டசபைத் தேர்தலில் த.வெ.க-வுக்கு ஆதரவு அளித்தோம்.

தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக ‘தமிழக வெற்றிக் கழகம்’ இருப்பதைப்போல, கேரள மக்களின் முன்னேற்றத்துக்காக ‘கேரள வெற்றி கழகம்’ என்ற பெயரைப் பயன்படுத்துகிறோம். இது தனிக் கட்சி அல்ல. என்.ஜே.சி மற்றும் விஜய் ரசிகர்களின் கூட்டணிதான். எங்கள் கட்சியை த.வெ.க-வில் இணைக்கத் தயாராக இருப்பதாக முதல்வர் விஜய், புஸ்ஸி ஆனந்த்திடம் கடிதமும் கொடுத்திருக்கிறோம். தேசிய அளவில் விஜய் பிரதமராக வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதனடிப்படையில் அவரது கொள்கைகளை, பிரசாரம் செய்துவருகிறோம்” என்றார்.

இதற்கிடையே, வயநாட்டில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ திரைப்பட புரொமோஷன் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த நீலகிரி மேற்கு மாவட்ட த.வெ.க செயலாளர் சரவணனை, என்.ஜே.சி தலைவர் மனோஜ் சங்கரநெல்லூர் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

கேரளத்தில் த.வெ.க-வின் முகம் யார் என்ற கேள்விக்கு கட்சித் தலைமை பதில் சொன்னால் மட்டுமே, தற்போது நிலவும் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்!