"என் கேரியரையே முடித்துவிடும் ஆபத்து".. நொந்துபோன விஜய் சங்கர்.. அஸ்வினிடம் மனம் திறந்த பேட்டி
"என் கேரியரையே முடித்துவிடும் ஆபத்து".. நொந்துபோன விஜய் சங்கர்.. அஸ்வினிடம் மனம் திறந்த பேட்டி
சென்னை: இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், சமூக வலைதளங்களில் தன்னை நோக்கி வரும் கடுமையான விமர்சனங்கள் மற்றும் கேலி கிண்டல்கள் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் சேனலில் கலந்துகொண்டு பேசிய விஜய் சங்கர், இந்த உருக்கமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் 2026 தொடரின் போட்டி ஒன்றில், கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த விஜய் சங்கரால் அந்த ஓவரில் 1 ரன் கூட எடுக்க முடியாமல், கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் அவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து ட்ரோல் செய்தனர். இதற்கு அஸ்வின் உடனான கலந்துரையாடலில் விஜய் சங்கர் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
அந்த ஆட்டம் குறித்துப் பேசிய விஜய் சங்கர், "நான் பேட்டிங் செய்ய களமிறங்கிய போதே போட்டி கிட்டத்தட்ட எங்கள் கையை விட்டுப் போய்விட்டது. கடைசி ஓவரில் 22 ரன்கள் அடிக்க வேண்டிய இக்கட்டான சூழல் இருந்தது. நான் பின்வரிசை பந்துவீச்சாளர்களுடன் பேட்டிங் செய்து கொண்டிருந்ததால், அவர்களிடம் ஸ்டிரைக்கை கொடுக்க முடியவில்லை. பெரிய ஷாட்களை அடிக்கவே தொடர்ந்து முயன்றேன். இரண்டு முறை 2 ரன்கள் ஓடும் வாய்ப்பு இருந்தது; ஆனால் ரன்-அவுட் ஆனால் அது தேவையில்லாத இழப்பாகிவிடும் என்று நினைத்தேன். மேலும் அணியின் நெட் ரன் ரேட்டையும் மனதில் வைத்து ஆட்டத்தை நெருக்கமாகக் கொண்டு செல்ல முயன்றேன். இதுதான் மைதானத்தில் உண்மையில் நடந்தது" என்று விளக்கமளித்தார்.
தொடர்ந்து ட்ரோல்களால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்துப் பேசிய விஜய் சங்கர், "சமூக வலைதளங்களில் உள்ளவர்கள் மைதானத்தின் உண்மையான சூழலை அறியாமல் பேசும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இதுபோன்ற கடுமையான கேலிகளால் பல வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையே முடிவுக்கு வந்துள்ளது. இது ஒரு வீரரின் எதிர்காலத்தையே அழித்துவிடும் ஆபத்தான விஷயமாகும். நான் இதிலிருந்து மனதளவில் வெளியே வந்துவிட்டாலும், மற்றொரு தொடரில் விளையாடச் செல்லும்போது நிர்வாகம் என்னை எப்படிப் பார்க்கும், அணி உரிமையாளர்கள் என்ன நினைப்பார்கள் என்ற பயமும் யோசனையும் எனக்குள் எழுகிறது" என்று கூறினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறாத விஜய் சங்கர், உலகெங்கும் உள்ள வெளிநாட்டு டி20 லீக்குகளில் விளையாடுவதற்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் இருந்து விலகினார். லங்கா பிரீமியர் லீக் தொடரைத் தொடர்ந்து, தற்போது ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் தொடரில் டப்ளின் கார்டியன்ஸ் அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.
இந்திய அணிக்காக 12 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விஜய் சங்கர், கடந்த 2019 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்காகப் பல முக்கிய போட்டிகளில் விளையாடியுள்ளார்.