கிணறுகள், போர்வெல்களில் நீர்மட்டம் குறைவதால் குடிநீருக்கு சிக்கல்: வறண்டு போன நீர்நிலைகளால் விவசாயமும் பாதிப்பு
மாவட்டத்தில் விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. காய்கறி, பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது. பருவ மழைக்காலத்தில் பெய்யும் மழையால் நிரம்பும் நீர்நிலைகளை கொண்டு வேளாண் தொழில் சிறப்புற நடந்து வருவது உண்டு.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை போதிய அளவு பெய்யாததால் மாவட்டத்தில் உள்ள பல குளங்கள், நீர்த்தேக்கங்களுக்கு தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது. பல நீர்த்தேக்கங்களுக்கு தண்ணீர் எட்டிக்கூட பார்க்கவில்லை.
மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பவில்லை. குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக இவையும் வற்றி வருவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் சுற்றியுள்ள கிணறுகள், போர்வெல்களில் நீர்மட்டம் நாளுக்கு நாள் விரைவாக குறைந்து வருகிறது.
இதே நிலை நீடித்தால் குடிநீர் தட்டுப்பாடு விரைவில் ஏற்படும் சூழல் உள்ளது.
தண்ணீர் பற்றாக்குறை, தொழில்நுட்ப காரணங்களால் குறிப்பிட்ட இடைவெளியில் காவிரி நீரை விநியோகம் செய்ய முடிவதில்லை. வீடுகளில் உள்ள போர்வெல்கள் வறண்டு வருவதால் உள்ளாட்சி அமைப்புகள் விநியோகம் செய்யும் நீரையே நம்பி உள்ளனர்.
தொப்பம்பட்டி பகுதியில் நல்லதங்காள் ஆற்றில் நீர் சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்டது. அப்பியம்பட்டி ஊராட்சி வீரப்பகவுண்டன்வலசு கிராமம் உட்பட பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம், போராட்டம் பல இடங்களில் நடந்து வருகிறது. புதிய போர்வெல்கள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.