📅 Thursday, 04 June 2026 IST | வைகாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 04, 2026 08:30 PM

கலகலத்த திரிணாமுல் காங்கிரஸ்... அதிருப்தி எம்எல்ஏக்களை அங்கீகரித்த சபாநாயகர்; மம்தாவுக்கு பின்னடைவு

கலகலத்த திரிணாமுல் காங்கிரஸ்... அதிருப்தி எம்எல்ஏக்களை அங்கீகரித்த சபாநாயகர்; மம்தாவுக்கு பின்னடைவு

கலகலத்த திரிணாமுல் காங்கிரஸ்... அதிருப்தி எம்எல்ஏக்களை அங்கீகரித்த சபாநாயகர்; மம்தாவுக்கு பின்னடைவு

ஒரு கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களில் மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட முடிவெடுத்தால் அவர்கள் மீது கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது.

Published : June 3, 2026 at 9:12 PM IST

கொல்கத்தா: மம்தா பானர்ஜிக்கு எதிராக செயல்படும் அதிருப்தி எம்எல்ஏக்கள் குழு தலைவர் ரிதப்ரதா பானர்ஜியை சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக அம்மாநில சபாநாயகர் அங்கீகரித்துள்ளார்.

ஆட்சியை இழந்த மம்தா

நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 294 சட்டப்பேரவை தொகுதிகளில் 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. குறிப்பாக மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி அடைந்தார். அதே நேரத்தில் 207 இடங்களில் வென்ற பாஜக, சுவேந்து அதிகாரி தலைமையில் ஆட்சி அமைத்தது.

3இல் 2 பங்கு அதிருப்தி எம்எல்ஏக்கள்

தேர்தல் தோல்விக்கு பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக எம்எல்ஏக்களில் ஒரு பிரிவினர் மம்தா பானர்ஜிக்கு எதிராக காய்களை நகர்த்தி வருகின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சொவன்தேப் சட்டோபாத்யாவை மம்தா பானர்ஜி அறிவித்த நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் ரிதப்ரதா பானர்ஜியை முன்னிறுத்தினர். குறிப்பாக அவரை எதிர்க்கட்சி தலைவராக பரிந்துரைத்து 59 டிஎம்சி எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்த கடிதத்தை சபாநாயகர் ரதிந்திர போஸுடம் இன்று வழங்கினர். இந்த கடிதத்தில் மம்தா பானர்ஜியை கட்சியின் தலைவர் என்று குறிப்பிட்டிருந்தனர். கடிதத்தை பெற்றுக்கொண்ட சபாநாயகர் பரிசீலித்து முடிவெடுப்பதாக தெரிவித்தார்.

கட்சி தாவலில் இருந்து தப்பிய எம்எல்ஏக்கள்

மம்தா அதிரடி நடவடிக்கை

இதனிடையே கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் மம்தா பானர்ஜி களமிறங்கியுள்ளார். கட்சியின் அனைத்து குழுக்கள் மற்றும் துணை அமைப்புக்கள் அனைத்தும் கலைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். அனைத்து நிலைகளிலும் சுயபரிசோதனை, செயல்திறன், அமைப்புசார் மதிப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான செயல்முறையை கட்சி மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிப்பு

இந்நிலையில், டிஎம்சி அதிருப்தி எம்எல்ஏக்கள் கொடுத்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், ரிதப்ரதா பானர்ஜியை எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரித்துள்ளார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரிதப்ரதா பானர்ஜி, " மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். சபாநாயகர் எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளார். தற்போது நாங்கள் ஒரு படி மேலே செல்ல விரும்புகிறோம். டிஎம்சி சட்டமன்ற குழுவுக்கு மம்தா பானர்ஜி ஆலோசகராக இருந்து எங்களுக்கு வழிகாட்ட வேண்டும். இது தொடர்பாக அவருக்கு நாங்கள் கடிதம் எழுதவுள்ளோம்.

அதே நேரத்தில் அபிஷேக் பானர்ஜிக்கும் மேற்கு வங்க சட்டப்பேரவைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அவர்தான் சபாநாயகருக்கு போலியான கடிதத்தை வழங்கினார். இதற்காக அவர் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியும்.

அபிஷேக் பானர்ஜிக்கு பொதுமக்களுடன் எவ்வித தொடர்பும் இல்லை. அப்படி தொடர்பு இருந்திருந்தால் அவர் 26 நாட்களாக தலைமறைவாக இருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சில நாட்களுக்கு முன்பு ஒரு திருடனை தாக்குவதை போன்று பொதுமக்கள் அவரை தாக்கினார்கள்" என காட்டமாக தெரிவித்தார்.