கம்பீரை நம்பினால் வேஸ்ட்.. படிக்கல் எடுத்த முயற்சி.. இலங்கை ஸ்பின்னருக்காக தினமும் 3 மணி நேர பயிற்சி
கம்பீரை நம்பினால் வேஸ்ட்.. படிக்கல் எடுத்த முயற்சி.. இலங்கை ஸ்பின்னருக்காக தினமும் 3 மணி நேர பயிற்சி
மும்பை: இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்சன் காயம் காரணமாக விலகக்கூடும் என்ற செய்தி வெளியான அதே வேளையில், கொழும்பில் இலங்கை லெவன் அணிக்கு எதிரான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் தேவுதத் படிக்கல் சதம் கடந்து அசத்தியுள்ளார்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் படிக்கல் 142 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். காலே மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அவரது இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. இது சரியான நேரத்தில் கிடைத்த வாய்ப்பாகத் தோன்றினாலும், இதற்குப் பின்னால் படிக்கலின் கடுமையான உழைப்பு ஒளிந்துள்ளது.
கடந்த சில வருடங்களாக உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் படிக்கல், இந்திய அணியில் மீண்டும் நுழைவதற்கான இந்த வாய்ப்பை வீணடித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இந்த இலங்கைப் பயணத்திற்கு முன்னதாக, படிக்கல் தனது சிறுவயது பயிற்சியாளரான முகமது நசீருதீனைத் தொடர்பு கொண்டு, இலங்கையின் சுழற்பந்துவீச்சு மற்றும் ஆடுகளங்களுக்கு ஏற்ப தன்னைத் தயார்படுத்திக் கொள்ள ஒரு சிறப்புத் திட்டத்தை வகுத்தார்.
இதுகுறித்து பேசிய அவரது பயிற்சியாளர் நசீருதீன் "கேஎஸ்சிஏ மகாராஜா டி20 லீக் போட்டிக்குப் பிறகு தேவ்தத் என்னை அணுகினார். அங்கு அவர் இந்தியா ஏ அணிக்காக விளையாடியதால் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். அதன் பிறகு, அவர் இலங்கை செல்வதற்கு முன்பு சிவப்பு நிற பந்துகளில் பயிற்சி பெற விரும்பினார்.
அப்போதுதான் இலங்கையில் டெஸ்ட் போட்டிகளுக்கு கூக்கபுரா பந்துகள் பயன்படுத்தப்படுவதால், நாமும் அந்தப் பந்துகளைப் பயன்படுத்திப் பயிற்சி பெறலாம் என்ற யோசனை எங்களுக்குத் தோன்றியது. உடனே அவர் அந்தப் பந்துகளை வாங்கி, நாங்கள் பயிற்சியைத் தொடங்கினோம்" என்று கூறினார்.
இந்தியாவில் பொதுவாக எஸ்ஜி பந்துகள் பயன்படுத்தப்படும் நிலையில், இலங்கையின் சூழ்நிலைக்கு ஏற்ப பந்துகளை மாற்றியதோடு மட்டுமின்றி, வெவ்வேறு உயரங்களைக் கொண்ட சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளவும் அவர் பயிற்சி மேற்கொண்டார்.
"இலங்கையில் அதிகப்படியான சுழற்பந்துவீச்சை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், அதற்கேற்ப பல்வேறு வகையான ஆடுகளங்களை அமைத்தோம். பந்து நன்கு திரும்பும் ஆடுகளங்களுடன் சேர்த்து, வெவ்வேறு உயரங்களைக் கொண்ட இடதுகை மற்றும் ஆஃப்-ஸ்பின்னர்களை வரவழைத்துப் பயிற்சி செய்தோம். தினமும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அவர்களின் பந்துவீச்சில் படிக்கல் பேட்டிங் பயிற்சி செய்தார். இலங்கை செல்வதற்கு முன்னதாக எந்த ஒரு வாய்ப்பையும் அவர் தவறவிட விரும்பவில்லை" என்று நசீருதீன் தெரிவித்தார்.