காஸாவில் தொண்டு அமைப்புகளின் பதிவு: சிங்கப்பூர் தெளிவுபடுத்தல்
மேற்குக்கரை, காஸா பகுதியில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் தன்னார்வச் சமூகத் தொண்டு நிறுவனங்கள், தங்களின் செயல்பாடுகளைப் பதிவுசெய்வதற்குச் சொந்த நாட்டு அரசாங்கங்களின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியமில்லை என்று சிங்கப்பூர் அதிகார அமைப்புகள் செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 22) தெளிவுபடுத்தியுள்ளன.
காஸாவில் ‘லவ் எய்ட் சிங்கப்பூர்’ எனும் அரசு சாரா அமைப்பைத் தொடங்கி நடத்தி வரும் சிங்கப்பூரரான கில்பர்ட் கோ, ஒப்புதல் கோரி சமர்ப்பித்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து, இது குறித்து ‘பாலஸ்தீனியன் அத்தோரிட்டி’ எனப்படும் பாலஸ்தீன இடைக்கால அரசாங்கத்திடம் சிங்கப்பூர் அரசாங்கம் தெளிவுபடுத்தியது.
அத்தகைய அமைப்புகள் தங்களைச் பாலஸ்தீன உள்துறை அமைச்சிடம் பதிவுசெய்து கொள்ள வேண்டும் என்று பாலஸ்தீன அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக அறநிறுவன ஆணையர் அலுவலகம், வெளியுறவு அமைச்சு, உள்துறை அமைச்சு ஆகியவை இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம், ரஹ்மத்தான் லீல் ஆலமீன் அறக்கட்டளை போன்ற உள்ளூர் அறநிறுவனங்களும் இத்தகைய நம்பகமான வழிகளில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.