📅 Friday, 14 August 2026 IST | ஆடி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 14, 2026 05:01 PM

கோடு போட்டு ரோடு போட்டுக் கொடுத்த.. வாரிசு நடிகரை ஃபாலோ செய்யும் வாரிசு நடிகர்கள்.. பணம் தான் விஷயமே

கோடு போட்டு ரோடு போட்டுக் கொடுத்த.. வாரிசு நடிகரை ஃபாலோ செய்யும் வாரிசு நடிகர்கள்.. பணம் தான் விஷயமே

சென்னை: தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களுக்கு எப்போதுமே தனி கவனம் இருக்கும். குடும்பப் பின்னணி இருந்தால் சினிமாவுக்குள் நுழைவது சற்று எளிதாக இருக்கலாம். ஆனால், தொடர்ந்து படங்களில் நிலைத்து நிற்பதற்கும், தங்களுக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்குவதற்கும் திறமை மட்டுமின்றி சரியான திட்டமிடலும் தேவைப்படுகிறது. இந்நிலையில், சீனியர் வாரிசு நடிகர் ஒருவர் போட்டு வைத்த பாதையைத்தான் தற்போது அடுத்த தலைமுறையைச் சேர்ந்த சில வாரிசு நடிகர்களும் பின்பற்றி வருவதாக கோலிவுட்டில் ஒரு சுவாரஸ்யமான கிசுகிசு கிளம்பியுள்ளது.

ஒரு காலத்தில் சினிமாவில் வாய்ப்புகள் தேடி அலைந்த வாரிசு நடிகருக்கு, அவரது குடும்பப் பின்னணி மட்டும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இதனால், தன்னுடைய சொந்த முயற்சியில் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் நல்ல பெயரை சம்பாதித்தாராம். அதன் பிறகு தனது சம்பளத்தையும், படங்களின் எண்ணிக்கையையும் படிப்படியாக உயர்த்தி, இன்று தனக்கென ஒரு பெரிய மார்க்கெட்டை உருவாக்கியிருப்பதாக பேசப்படுகிறது.

இளம் வாரிசு நடிகர்கள்: அவருடைய இந்த டெக்னிக்கைத்தான் இப்போது சில இளம் வாரிசு நடிகர்களும் கையில் எடுத்திருக்கிறார்களாம். ஆரம்பத்தில் பெரிய ஹீரோக்களைப் போல அதிக சம்பளம் கேட்பதைவிட, தயாரிப்பாளர்களுக்கு லாபகரமாக இருக்கும் வகையில் படங்களைத் தேர்வு செய்வது, அடுத்தடுத்து பட வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வது என கணக்கு போட்டு காய் நகர்த்துகிறார்களாம்.

பேச்சு: குறிப்பாக, "சினிமாவில் பெயர் மட்டும் போதாது.. பணம்தான் இறுதியில் பேசும்" என்ற சீனியர் வாரிசு நடிகரின் அணுகுமுறையை சிலர் அப்படியே பின்பற்றுவதாக திரையுலகில் பேச்சு அடிபடுகிறது.

பக்கா பிளான்: அதிலும் ஒரு சில இளம் நடிகர்கள், தங்களுடைய குடும்பப் பின்னணியை வைத்து பெரிய படங்களை பிடிப்பதைவிட, முதலில் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு படம் ஹிட்டானதும் அடுத்த படத்துக்கான சம்பளம், மார்க்கெட் என அனைத்தையும் உயர்த்திக்கொள்ளலாம் என்பதுதான் இவர்களின் கணக்காம். இதனால், "கோடு போட்டு ரோடு போட்டவரை பார்த்து, அடுத்த வாரிசுகள் ரோட்டில் இறங்கிட்டாங்களே!" என கோலிவுட்டில் ஜாலியான பேச்சுகளும் அடிபடுகின்றன. ஆனால், இந்த யுக்தி யாருக்கு கை கொடுக்கப்போகிறது என்பதுதான் இப்போது சினிமா வட்டாரத்தில் இருக்கும் சுவாரஸ்யமான கேள்வியாக இருக்கிறது.