கோவை அரசு மருத்துவமனை மருந்து கவர்களில் இந்தி மொழி
அரசு மருத்துவமனை மாத்திரை கவர்களில் ‘இந்தி’ மொழி - தி.மு.க ஆட்சியில் அச்சிடப்பட்டதாக த.வெ.க விளக்கம்
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்துள்ளது போல! முதலில் கரூர், இப்போது கோவையிலும் அதே நிலைமை என முன்னாள் தி.மு.க அமைச்சர் டி.ஆர்.பி ராஜா விமர்சித்திருந்தார்.
Published : October 7, 2026 at 8:15 AM IST
Updated : October 7, 2026 at 9:55 AM IST
கோயம்புத்தூர்: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவரில் தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழிகளும் இடம்பெற்றிருப்பதற்கு தி.மு.க உள்ளிட்ட பல இயக்கங்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், அந்த கவர்கள் 2025ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் அச்சிடப்பட்டதாக தவெக விளக்கம் அளித்திருக்கிறது.
மேற்கு மண்டலத்தில் மிகப்பெரிய மருத்துவமனையாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். மேலும் 2,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருவது வழக்கம்.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் தனித்தனி கவர்களில் போட்டு கொடுக்கப்படுகிறது. அந்த கவர்களில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்தி எழுத்துகள் சர்ச்சை
தொழில் நகரமான கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான புலம்பெயர் வட மாநில தொழிலாளர்கள் உள்ளதால் அவர்களும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
எனவே, அவர்களுக்கு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்துகளை எப்போது, எவ்வாறு உட்கொள்வது என்பதில் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க, மருந்தின் பெயர், அளவு மற்றும் எந்த நேரத்தில் உட்கொள்ள வேண்டும் (காலை, மதியம், இரவு) போன்ற அத்தியாவசிய வழிமுறைகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என மும்மொழிகளில் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தி.மு.க விமர்சனம்
இருப்பினும், தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் இந்த சூழலில் அரசு மருத்துவமனை மருந்து கவரில் இந்தி இடம்பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை மட்டுமே கடைபிடிக்கப்படும் என தமிழக வெற்றிக் கழக அரசு கூறினாலும், இது போன்ற செயல்கள் நடைபெறுவது கண்டிக்கத்தக்கது என திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.
#தமிழ்நாடு மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்துள்ளது போல ! முதலில் கரூர்... இப்போது கோவையிலும் அதே நிலமை... #HindiImposition #TvkFailsTN #Tvk https://t.co/N2o9ikE8VO
இதுகுறித்த அவரது எக்ஸ் பதிவில், “தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்துள்ளது போல! முதலில் கரூர், இப்போது கோவையிலும் அதே நிலைமை” என குறிப்பிட்டு இந்தி எழுத்துகளில் உள்ள கவர்களின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர். கு.ராமகிருஷ்ணன் கூறுகையில், “தமிழகத்தில் இப்போது இருமுறை கொள்கை தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த அரசு அமைந்ததிலிருந்து மும்மொழிக் கொள்கையை கடைபிடித்து வருகின்றனர். தற்போது அரசு மருத்துவமனைகளில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகளில் அச்சிடப்பட்டுள்ள மாத்திரை கவர்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதே போன்று மதுரை கள்ளழகர் கோயில் நுழைவாயிலில் இருந்த தமிழ் எழுத்துக்கள் அழிக்கப்பட்டு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே கோயிலின் பெயர் எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பாக முற்போக்கு இயக்கங்கள் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டு விரைவில் போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
மாத்திரை கவர் விவகாரத்தில் தி.மு.க மலிவான அரசியல் செய்வதாகவும், அவர்களின் போலி நாடகம் வெளுத்து விட்டதாகவும் கூறி எக்ஸ் பதிவு வெளியிட்டுள்ள சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ், இது தொடர்பான விளக்கத்தையும் அளித்துள்ளார்.
அதில், “டிசம்பர் 2025-ல், மத்திய சிறையிலிருந்து வரும் கவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், ஈரோடு மாவட்ட அச்சக தொழில் கூட்டுறவு சங்கம் மூலம் 4 லட்சம் கவர்கள் அச்சிட கடந்த தி.மு.க ஆட்சியில் டிசம்பர் 31, 2025 அன்று அவசர ஆணை வழங்கப்பட்டு, அந்த கவர்கள் 2026 ஜனவரி மாதத்திலேயே மக்களிடம் புழக்கத்திற்கு வந்துவிட்டன.
மாத்திரை உறை விவகாரத்தில் மலிவான அரசியல் செய்யும் திமுக: வெளுத்தது போலி நாடகத்தின் சாயம்! - விரிவான கண்டன அறிக்கை எதற்கெடுத்தாலும் மொழியை வைத்து மலிவான அரசியல் பிழைப்பு நடத்தும் திமுகவினர், தற்போது கரூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாத்திரை உறைகளைக் கையில் எடுத்து, தாங்கள் செய்த வரலாற்றுப் பிழையை மறைத்து இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி முதலைக்கண்ணீர் வடிப்பதற்கு எங்கள் கடும் கண்டனங்கள்! உண்மையை அடியோடு மறைத்து, மக்கள் மத்தியில் திட்டமிட்டுப் பொய்க் குழப்பத்தை ஏற்படுத்தத் துடிக்கும் திமுகவினருக்கும், தமிழக மக்களுக்கும் இந்த விவகாரத்தின் அப்பட்டமான உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது. உண்மை நிலை என்ன? கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவர்கள் பொதுவாக மத்திய சிறையில் இருந்து பெறப்பட்டு, அதில் 'காலை / மதியம் / இரவு' போன்ற குறிப்புகள் தமிழ் மொழியில் மட்டுமே முத்திரையிடப்பட்டு (Seal) வழங்கப்படுவது வழக்கம். கடந்த டிசம்பர் 2025-ல், மத்திய சிறையிலிருந்து வரும் கவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், ஈரோடு மாவட்ட அச்சக தொழில் கூட்டுறவு சங்கம் மூலம் 4 லட்சம் கவர்கள் அச்சிட கடந்த திமுக ஆட்சியில் டிசம்பர் 31, 2025 அன்று அவசர ஆணை வழங்கப்பட்டு, அந்த கவர்கள் 2026 ஜனவரி மாதத்திலேயே (திமுக ஆட்சிக் காலத்திலேயே) மக்களிடம் புழக்கத்திற்கு வந்துவிட்டன! அதேபோல் கோவையில் சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பே — அதாவது திமுக ஆட்சியில்தான் — அலுவலக நடைமுறையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, சிந்தாமணி கூட்டுறவு நிறுவனம் மூலம் அச்சிடப்பட்டு நடைமுறைக்கே கொண்டு வரப்பட்டது! தங்கள் ஆட்சியிலேயே இந்தியை அனுமதித்து, அதற்கான வார்ப்புருவை (Template) உருவாக்கி, நோயாளிகளிடமும் புழக்கத்திற்கு விட்டுவிட்டு, இப்போது ஆளுங்கட்சி மீது பழிபோடுவது எந்த வகையிலான அரசியல்? தங்கள் ஆட்சியிலேயே இவை புழக்கத்திற்கு வந்தபோது வாய்மூடி, கைகட்டி மௌனியாக இருந்த திமுகவினர், இப்போது திடீரென மொழிப்போர் காவலர்கள் போல் வேடம் போடுவது ஏன்? தாங்களே இந்தியைத் திணித்துவிட்டு, இப்போது அதனை ஒரு பூதாகரமான பிரச்சனையாக மாற்றி அரசியல் குளிர்காய நினைப்பது திமுகவின் அப்பட்டமான பித்தலாட்டம்! தற்போதைய நிர்வாகம், கிடங்கில் உள்ள தேவையின் அடிப்படையில் மட்டுமே கவர்களைக் கொள்முதல் செய்ததே தவிர, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அந்த வடிவமைப்பிலோ அல்லது மொழியிலோ எந்த மாற்றமும் செய்யவில்லை. தாங்கள் செய்த துரோகத்தை மறைக்க, எங்கள் மீது அபாண்டமாகப் பழிபோடும் திமுகவின் கேவலமான அரசியல் தந்திரம் இது! உடனடி நடவடிக்கை: இந்த விவகாரம் அரசின் கவனத்திற்கு வந்தவுடனேயே, கரூர் மற்றும் கோவை ஆகிய இரு இடங்களிலும் அந்த மாத்திரை உறைகளின் பயன்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. கரூரில் மீண்டும் பழைய நடைமுறைப்படி, மத்திய சிறையிலிருந்து கவர்கள் பெறப்பட்டு 'தமிழ் மொழியில் மட்டுமே' விவரங்கள் முத்திரையிடப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கும் பணி உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் மேற்கொண்டு நோயாளிகளின் பயன்பாட்டிற்காக 'தமிழ் மற்றும் ஆங்கிலம்' ஆகிய இரு மொழிகள் மட்டுமே கொண்ட மாத்திரை கவர்கள் உடனடியாகத் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேரறிஞர் அண்ணா வழியில் இருமொழிக் கொள்கையை பெயரளவில் இல்லாமல், தன் உயிர் மூச்சாகக் கடைபிடித்து வரும் ஒரே இயக்கம் தமிழக வெற்றிக் கழகம். இதில் எப்போதும் சமரசம் செய்ய மாட்டோம். பொய்களை மட்டுமே மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்து பழகிப்போன திமுகவினர் இனிமேலாவது இதுபோல் மலிவான அரசியலை விடுத்து ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். #StopCheapPolitics #DMK_Hypocrisy #TamilNadu #LanguagePolitics #FactCheck @TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம் #TVK
அதேபோல் கோவையில் சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பே; அதாவது, அலுவலக நடைமுறையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, சிந்தாமணி கூட்டுறவு நிறுவனம் மூலம் அச்சிடப்பட்டு நடைமுறைக்கே கொண்டு வரப்பட்டது” என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், “தங்கள் ஆட்சியிலேயே இந்தியை அனுமதித்து, அதற்கான வார்ப்புருவை (Template) உருவாக்கி, நோயாளிகளிடமும் புழக்கத்திற்கு விட்டுவிட்டு, இப்போது ஆளுங்கட்சி மீது பழிபோடுவது எந்த வகையிலான அரசியல்?
தங்கள் ஆட்சியிலேயே இவை புழக்கத்திற்கு வந்தபோது வாய்மூடி, கைகட்டி மௌனியாக இருந்த தி.மு.க-வினர், இப்போது திடீரென மொழிப்போர் காவலர்கள் போல் வேடம் போடுவது ஏன்?” என அமைச்சர் அருண்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடவடிக்கை என்ன?
இந்த விவகாரம் அரசின் கவனத்திற்கு வந்தவுடனேயே, கரூர் மற்றும் கோவை ஆகிய இரு இடங்களிலும் அந்த மாத்திரை உறைகளின் பயன்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், “கரூரில் மீண்டும் பழைய நடைமுறைப்படி, மத்திய சிறையிலிருந்து கவர்கள் பெறப்பட்டு 'தமிழ் மொழியில் மட்டுமே' விவரங்கள் முத்திரையிடப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கும் பணி உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் மேற்கொண்டு நோயாளிகளின் பயன்பாட்டிற்காக 'தமிழ் மற்றும் ஆங்கிலம்' ஆகிய இரு மொழிகள் மட்டுமே கொண்ட மாத்திரை கவர்கள் உடனடியாகத் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
த.வெ.க பதிலடி
இந்நிலையில், இந்தி எழுத்துகள் இடம்பெற்றிருக்கும் அந்த கவர்கள் 2025ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்காலத்தில் அச்சிடப்பட்டதாக தவெக விளக்கம் அளித்திருக்கிறது. இதுகுறித்து தவெக ஐடி விங் எக்ஸ் பக்கத்தில், “மாத்திரை கவரில் இந்தியுடன் மும்மொழி இடம்பெற்றதாக தீயசக்திக் கூட்டம் கொதித்துக் குதித்துக் கூப்பாடு போடுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இயங்கும் மனசாட்சி உள்ள மக்களாட்சி இப்படி ஒரு மும்மொழி மோசடியை ஒருநாளும் செய்யாது. மொழிக்கொள்கையைப் பொறுத்தவரை அண்ணாவின் இருமொழிக் கொள்கையே நம் த.வெ.க. அரசின் சமரசமற்ற ஒரே நிலைப்பாடு.
உண்மை என்னவெனில், வெற்று விளம்பர மாடல் தி.மு.க. ஆட்சியில்தான் கடந்த 2025 டிசம்பர் மாதம் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பாக வழங்கப்பட்ட ஆணை மூலம் ஈரோடு கூட்டுறவு சங்க அச்சகத்தில் அச்சடிக்கப்பட்ட மாத்திரை கவரில்தான் இந்தியும் இடம்பெற்றுள்ளது. இந்த உண்மையை, சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரே தெளிவுபடுத்தி உள்ளார்” என்று விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.