கோவை, நீலகிரி, தேனிக்கு ஆரஞ்சு அலர்ட்...வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கோயம்புத்தூர், நீலகிரி, தேனி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் வாய்ப்பு இருப்பதால், ஆரஞ்சு எச்சரிக்கை (Orange Alert) விடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 1: மேற்கு மாவட்டங்களில் கனமழை
இன்று (ஆகஸ்ட் 1) கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.
மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூர், நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை நீடிக்கும். மேலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களிலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகும் வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 4-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், வடமேற்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையின் வானிலை எப்படி இருக்கும்?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 37–38 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 27–28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.