📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports May 27, 2026 05:31 PM

கோவையில் தயாராகி வரும் சர்வதேச விளையாட்டு போட்டி அரங்குகள் விரைவில் திறப்பு

கோவையில் தயாராகி வரும் சர்வதேச விளையாட்டு போட்டி அரங்குகள் விரைவில் திறப்பு

கோவை: கோவை மாநகரில் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பயன்பெறும் வகையிலும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் வகையிலும் அமைக்கப்படும் உள், வெளி அரங்குகளுக்கான பணிகள் விரைவில் நிறை வடையும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி 83-வது வார்டு நேரு விளையாட்டரங்கம் அருகே, மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு போட்டிக்கான அரங்குகள் அமைக்கும் பணியை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்.

கைப்பந்து, இறகுப்பந்து, கபடி மற்றும் வுஷூ உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிக்கான உள்விளையாட்டு அரங்கங்களின் பணிகளையும், தற்போதைய நிலையையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: மாநகராட்சி பொது நிதியின் கீழ், ரூ.2 கோடி மதிப்பீட்டில் கைப்பந்து உள் விளையாட்டு அரங்கம் மற்றும் மேற்கூரை அமைக்கும் பணி நடந்துவருகிறது.

கோவை எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில், பார்வையாளர்கள் அரங்கம் அமைக்கும் பணியும், அதே விளையாட்டு மைதானத்தில், தனியார் பங்களிப்புடன் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் மேற்கூரையுடன் கூடிய இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

மேலும், மாநகராட்சி பொதுநிதியின் கீழ், ரூ.1.50 கோடி மதிப்பீட்டில், மேற்கூரையுடன் கூடிய கபடி உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியும், மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் மேற்கூரையுடன் கூடிய வுஷூ தற்காப்பு உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

இப் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இன்னும் 2 வாரங்களுக்குள் உள் அரங்கு பணிகள் முழுமை பெறும். உள்விளையாட்டு அரங்குகள் விரைவில் திறக்கப்படும்.

இது நல்ல தரத்தில் இருப்பதால் விளையாட்டு பிரியர்களுக்கு அதிகம் பயன்படும் என்பதால், இந்த உள் அரங்குகளுக்கான தேவை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது, உதவி ஆணையர் ச.நா.சண்முகம், உதவி பொறியாளர் சதீஷ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.