📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 31, 2026 08:32 PM

கர்நாடகா தியேட்டர்களில் ஜனநாயகன் படம் திரையிடல் நிறுத்தம்

கர்நாடகா தியேட்டர்களில் ஜனநாயகன் படம் திரையிடல் நிறுத்தம்

பெங்களூரு; கர்நாடகா தியேட்டர்களில் ஜனநாயகன் படம் திரையிடுவது நிறுத்தப்பட்டுள்ளது.

காவிரி நீர் விவகாரம் தமிழகம், கர்நாடகா இடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. காவிரி தண்ணீர் வேண்டி தமிழகத்தில் விவசாயிகளும், அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் குதித்து உள்ளன.

முதல்வர் விஜய் கர்நாடகா முதல்வரை சந்தித்து, காவிரி விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் தற்போது சரியான சூழல் இலலாத காரணத்தால் அவரை வரவேண்டாம் என்று கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் கேட்டுக் கொண்டு உள்ளார்.

காவிரி நீர் திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி கன்னட ஆதரவு அமைப்புகளும் ஆக.13ம் தேதி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள தருணத்தில் கர்நாடகாவில், முதல்வர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் தியேட்டர்களில் திரையிடுவது திடீரென நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்னையை மையப்படுத்தி தியேட்டர்களின் உரிமையாளர்கள் ஜனநாயகன் படத்தை திரையிடுவதை நிறுத்தி வைத்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் காட்சிகள் முன் அறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டு உள்ளன.

ஊர்வசி திரையரங்கில், போலீசாரின் அறிவுரையை ஏற்று ஜனநாயகன் படம் திரையிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டர்கள், கட் அவுட்டுகளும் அகற்றப்பட்டன. அதற்கு பதிலாக கன்னட திரைப்படமான காரவல்லி படம் திரையிடப்பட்டு உள்ளது. தியேட்டர் முன்பாக போலீசாரும் முன் எச்சரிக்கையாக பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.

மாண்டியாவில் உள்ள திரையரங்கு ஒன்றில் வைக்கப்பட்டு இருந்த ஜனநாயகன் பட பேனர்களை, கன்னட ஆதரவு அமைப்பினர் அகற்றி இருக்கின்றனர். படக்காட்சிகள் ரத்து, கட் அவுட்டுகள் அகற்றம் என நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த கர்நாடகா பிலிம் சேம்பர் அமைப்பின் நிர்வாகிகள் முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.