📅 Saturday, 26 September 2026 IST | புரட்டாசி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 10, 2026 08:33 AM

 கர்நாடகாவுக்கு இன்று வராதீங்க! : வாட்டாள் நாகராஜ் அடாவடி

 கர்நாடகாவுக்கு இன்று வராதீங்க! : வாட்டாள் நாகராஜ் அடாவடி

பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தை கண்டித்து, கர்நாடகா - தமிழக எல்லையான அத்திப்பள்ளி யில் இன்று கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்துகின்றன. இதனால், 'தமிழக வாகனங்கள், தமிழக மக்கள் இன்று கர்நாடகா வரக்கூடாது' என்று, வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசை கண்டித்து, கர்நாடகாவில் வரும் 13ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த, கன்னட அமைப்பு கள் அழைப்பு விடுத்துள்ளன.

இந்நிலையில், கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ், பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்திற்கு நேற்று சென்று, 'முழு அடைப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும்' என, அழைப்பு விடுத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

வரும் 13ல் மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு, அனைத்து ஏற்பாடுகளையும் கன்னட அமைப்புகள் செய்துள்ளன. காவிரியில் தண்ணீர் திறந்து விடும் விஷயத்தில், காங்., அரசு மக்களை தவறாக வழிநடத்துகிறது.

காவிரி பிரச்னை குறித்து தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இடையே விவாதம் நடக்கிறது. ஆனால், இங்கு எதுவும் நடக்கவில்லை. நாம் திறந்து விடும் தண்ணீர், தமிழகத்தில் வீணாக கடலில் கலக்கிறது; நமக்கு தான் நஷ்டம்.

கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகள் நமக்கு உரியது. நமது விவசாயிகளுக்காக கட்டப்பட்டது. மேகதாது திட்டத்திற்கு இடைஞ்சலாக இருக்கும், தமிழக அரசை கண்டித்து தமிழக எல்லையான அத்திப்பள்ளி யில் இன்று மதியம் 12:30 மணிக்கு போராட்டம் நடத்த உள்ளோம்.

அப்போது தமிழக வாகனங்கள், தமிழக மக்கள் இங்கு வரக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

'போராட்டம் நடக்கும் போது, தமிழக பஸ்கள், வாகனங்கள் கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படாமல், அத்திப்பள்ளி எல்லையில் நிறுத்தப்படும்' என, தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.