கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அஞ்சலி
கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அஞ்சலி
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் திமுகவினரால் அனுசரிக்கப்படுகிறது.
Published : August 7, 2026 at 12:46 PM IST
சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 7) அஞ்சலி செலுத்தினார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராகவும், தி.மு.க.வின் தலைவராகவும் இருந்தவர் கருணாநிதி. இவர், உடல்நல குறைவு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். இதனை தொடர்ந்து, கருணாநிதியின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு நாள் தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுகவினரால் அனுசரிக்கப்படுகிறது. கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, திமுக தலைவரும் மற்றும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டோர் சென்னை அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து, சென்னை அண்ணா சாலையில் இருந்து பேரணியாக புறப்பட்டு சென்று மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எண்பது ஆண்டுகாலப் பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். அரை நூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்.
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர். 13 முறை சட்டமன்ற உறுப்பினர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர். அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர். நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி.
அரசியலும் ஆட்சியும், கலையும் இலக்கியமும், திரையும் நாடகமும், சின்னத்திரையும், சமூக வலைத்தளமும் என அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை. கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று! அவர்தான் நமக்கு எல்லாம்! அவரின்றி நாம் இல்லை!” என பதிவிட்டுள்ளார்.