கரூர் பணி நியமனத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்த விவகாரம்
கரூர் பணி நியமனத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்த விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
பணி நியமனத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருந்தார்.
Published : July 29, 2026 at 11:16 PM IST
புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினர் 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க முடிவுச் செய்யப்பட்டு, இதற்கான பணி நியமன ஆணையை கடந்த ஜூலை 10-ஆம் தேதி முதலமைச்சர் விஜய், பயனாளிகளுக்கு நேரில் வழங்கினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், திண்டுக்கல் வேடசந்தூரைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு பணியை ரத்து செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜூலை 17-ம் தேதிக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசை அறிவுறுத்தியதோடு, இதுதொடர்பான புதிய மனுக்களையும் சேர்த்து, வழக்குகளின் விசாரணையை ஜூலை 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, இந்த வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், ஜூலை 27-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அன்றைய தினம், நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் தீரன் திருமுருகன், மதுரை தெற்கு வாசலை சேர்ந்த சீனி அகமது ஆகியோரின் மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது அரசுத்தரப்பில், "கருணைப் பணியை பொறுத்தவரை சில வழிகாட்டுதல்கள் உள்ளன. வயது, கல்வி என தகுதியின் அடிப்படையிலேயே அவை வழங்கப்பட வேண்டும். அவ்வாறு தான் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கும் அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதிகள், "சிவகாசியில் அடிக்கடி வெடி விபத்து நிகழும் சூழலில், அவர்களுக்கு அரசுப்பணி கோரினால் என்ன செய்வது? வேலைவாய்ப்பிற்காக பலர் காத்திருக்கிறார்களே?" என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி உதவலாமே? என்று் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அது இவ்வாறு பணி வழங்குவதை விட பயனுள்ளதாக இருக்கும் என கருத்து தெரிவித்தனர்.
மேலும், சாதாரண பணி வழங்குவதாக அரசுத்தரப்பில் கூறுவதை ஏற்க இயலாது. எந்த பணியும் சாதாரண பணி அல்ல. அது ஒருவரின் குடும்பத்திற்கு உதவும் பணியே. எனவே கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்கிய அரசாணை ரத்து செய்யப்படுகிறது" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வெளியானவுடன், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருந்தார்.
அதன்படி, அரசுப் பணி நியமனங்களை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில், உயர்நீதிமன்ற மதுரை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.